கடந்த மே மாதம் முதல் லடாக் எல்லையில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைய முயற்சி செய்து வருகின்றனர். இதன்காரணமாக கடந்த 4 மாதங்களாக இந்தியா, சீனா இடையே போர்ப் பதற்றம் நிலவி வருகிறது. கடந்த 4-ம் தேதி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் வெய் பெங்கியும் சந்தித்துப் பேசினர். அப்போது லடாக் எல்லை நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கடந்த 10-ம் தேதி இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயும் மாஸ்கோவில் சந்தித்துப் பேசினர். அப்போது எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண 5 அம்ச திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த பின்னணியில், இந்திய, சீன எல்லை பிரச்சினை குறித்து மக்களவையில் அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று விரிவான விளக்கம் அளித்தார். அப்போது அவர், ``எல்லைப் பிரச்சினையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே இதுவரை சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை. எல்லை விவகாரத்தில் சீனா முரண்பட்டு நிற்கிறது. லடாக்கில் சுமார் 38 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவை சீனா ஆக்கிரமித்துள்ளது. கடந்த 1963-ம் ஆண்டு சீனா, பாகிஸ்தான் எல்லை ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 5,180 சதுர கி.மீ. பரப்பளவையும் சீனா ஆக்கிரமித்துள்ளது" என்றார்.
கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 16ஆம் தேதி இந்தியச் சீன படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் சீன தரப்பில் 35க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவித்தன.
இந்திய பகுதிகளை சீனா ஆக்கிரமித்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இருப்பினும், “ இந்திய எல்லைக்குள் யாரும் ஊடுருவவில்லை. . நம் மண்ணில் ஒரு அங்குல இடத்தைக் கூட யாரும் ஆக்கிரமிக்க முடியாத அளவுக்கு நமது படைகள் பலம் வாய்ந்தவை” என கடந்த ஜூன் 19ஆம் தேதி நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இந்த நிலையில் லடாக்கில் சீன படையினரின் அத்துமீறல் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று மக்களவையில் நேற்று (செப்டம்பர் 15) காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் பிரதமர் பதில் அளிக்க வேண்டும் என்ற காங்கிரஸ் எம்.பி.க்களின் கோரிக்கையை ஏற்க மக்களவை சபாநாயகர் மறுத்தார். இதனையடுத்து அவையிலிருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, எல்லை விவகாரம் குறித்து பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “சீனாவுடனான எல்லைப் பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது. இப்போது வரை, பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு எதுவும் இல்லை. எல்லை தொடர்பான ஒப்பந்தங்களை சீனா மதிப்பதில்லை. யூனியன் பிரதேசமான லடாக்கில் 38,000 சதுர கி.மீ பரப்பளவை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது.
அதேபோல 1963ஆம் ஆண்டு சீனா, பாகிஸ்தான் எல்லை ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 5,180 சதுர கி.மீ. பரப்பளவையும் சீனா ஆக்கிரமித்துள்ளது. 1993 மற்றும் 1996-ம் ஆண்டுகளில் சீனாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களின்படி எல்லையில் வீரர்களை குவிக்கக் கூடாது. இருந்தாலும், ஒப்பந்தத்தை மீறி சீனா செயல்படுகிறது” என்று குற்றம்சாட்டினார்
எல்லை தொடர்பான இரு நாடுகளின் கருத்தும் வேறு வேறாக உள்ளது என்று குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், “சீனாவின் ஊருடுவல் முயற்சிகளை இந்திய ராணுவம் தொடர்ந்து தடுத்து நிறுத்தி வருகிறது. எல்லையில் சீன ராணுவத்தின் செயல்பாட்டை பொறுத்தே இருநாடுகளின் உறவு அமையும்” என்றும் கூறினார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “சீன ஆக்கிரமிப்பு விவகாரத்தில் மோடி பொய் சொல்லி இருக்கிறார் என்பது, பாதுகாப்பு துறை அமைச்சரின் அறிக்கையில் இருந்து தெளிவாக தெரிகிறது. நம் நாடு எப்போதும் ராணுவத்திற்கு ஆதரவாக இருந்திருக்கறது, இனியும் இருக்கும். மோடி அவர்களே சீனாவின் பெயரை சொல்லக் கூட அஞ்சி நடுங்காதீர்கள்” என்று சாடியுள்ளார்.