உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தலித் பெண் ஒருவர் நான்கு இளைஞர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதில் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். இவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்கு, நேற்று முன்தினம் அப்பகுதிக்கு சென்று கொண்டிருந்த முன்னாள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி மற்றும் அவருடைய சகோதரி பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும் ராகுல் காந்தியை போலீசார் சட்டையைப் பிடித்து தள்ளியதால், நிலை தடுமாறி அவர் கீழே விழுந்தார்.
ஹத்ராஸ் பகுதிக்குள் யாரும் செல்ல முடியாதவாறு 144 தடையுரத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சில காங்கிராஸார் அங்கு செல்ல முயன்று, அவர்களும் அப்பகுதிக்கு செல்ல தடுக்கப்பட்டனர். இதுபற்றி அவர்கள் ஊடகங்களிடம் கூறுகையில், ''பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு நாங்கள் தனித்தனியாக சென்று ஆறுதல் கூற இருந்தோம். ஆனால் எங்களை ஏன் தடுத்தனர் என்று தெரியவில்லை. மிருகத்தனமான ராஜ்ஜியம் நடத்துகின்றனர். இன்னும் நாங்கள் 1.5 கி. மீட்டர் சென்றால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் வீட்டுக்கே சென்று விடுவோம்'' என்று தெரிவித்துள்ளனர்.
இந்தளவுக்கு ஒரு அரசாங்கம் பிரச்னையை மூடி மறைப்பதற்கான வேலைகளை செய்யுமா, அநீதி இழைக்குமா என எதிர்க்கட்சிகள் சராமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றன. காங்கிரஸார் போலவே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டெரிக் ஓ பிரையன் உள்ளிட்டோரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். போலீஸார் அத்துமீறி அவர்களைத் தாக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தச் சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
இந்தநிலையில், `ஹத்ராஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திக்க அரசியல் கட்சியினருக்கும் ஊடகத்தினருக்கும் உ.பி அரசு அனுமதியளிக்க வேண்டும்’ என பா.ஜ.க மூத்த தலைவரும், மத்தியப்பிரதேச முன்னாள் முதலமைச்சருமான உமா பாரதி அறிவுறுத்தியிருக்கிறார். இதுதொடர்பாக மாவட்ட துணை சூப்பிரண்டு பிரகாஷ் குமார் கூறியபோது, ``விசாரணைக்கு இடையூறு ஏற்படக் கூடாது என்பதற்காகவும், சட்டம் ஒழுங்கு காரணங்களுக்காகவும் ஊடகங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் நுழைவதற்கான தடை அமலில் இருக்கிறது" என்றார்.
தற்போது ஹத்ராஸில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை ஊடகத்தினர் சந்திக்க, இரண்டு நாள்களுக்குப் பின்னர் மாவட்ட நிர்வாகம் இன்று அனுமதியளித்திருக்கிறது. அதேநேரம், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. மேலும் கவுதம் புத்தாநகர் மாவட்டத்தி்ல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் 5 பேருக்கு மேல் அனுமதிக்க முடியாது என்பதால், ராகுல், பிரியங்கா உள்பட 5 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.