அமிர்தசரஸில் கால்டாக்ஸி ஓட்டுநர் பாலியல் துன்புறுத்தல் செய்ததால், ஓடும் காரில் இருந்து குதித்து இரண்டு பெண்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியில் அமைந்துள்ள ரஞசித் அவென்யூயில் செயல்பட்டு வரும் ஒரு உணவகத்திற்குச் செல்வதற்காக அந்த பகுதியைச் சேர்ந்த 3 இளம் பெண்கள், நேற்று இரவு நேரத்தில் அந்த பகுதியில் வாடகைக்கு கார் ஒன்றை புக் செய்து விட்டு காத்திருந்தனர்.
அதன்படி, புக்கிங் செய்த வாடகை கார் வந்தது. அதில், அந்த 3 பெண்களும் ஏறி அமர்ந்தனர். கார் சிறிது தூரம் சென்றதும் காரின் ஓட்டுநர் அந்த 3 பெண்களில் தனது கைக்கு எட்டும் தூரத்தில் காரின் நடுவில் அமர்ந்திருந்த குறிப்பிட்ட ஒரு பெண்ணை பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு அந்த பெண்ணை துன்புறுத்தி உள்ளார். இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த அந்த 3 இளம் பெண்களும், அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, தனது காரை அந்த ஓட்டுநர் வேகமாக ஓட்டத் தொடங்கினார். இதனால், “தன்னை அவன் கடத்திச் செல்கிறான்” என்பதை உணர்ந்த அந்த 3 பெண்களில் இரு பெண்கள் வேகமாக ஓடிய அந்த காரி் இருந்து கதவை திறந்துகொண்டு ரோட்டில் குதித்து உள்ளனர்.
ஆனாலும், காரை நிறுத்தாமல், அந்த ஓட்டுநர் காரை இன்னும் வேகமாக ஓட்டிச் சென்றான். அந்த காரில் ஒரு பெண் மட்டும் கீழே குதிக்காமல் பயந்துகொண்டு அங்கேயே இருந்துள்ளார்.
அத்துடன், ஓடும் காரில் இருந்து இளம் பெண் கீழே குதிப்பதைப் பார்த்த அந்த பகுதியில் நின்றுகொண்டிருந்தவர்கள், உடனடியாக ஓடிச் சென்று அந்த 2 பெண்களையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், அங்கு இருசக்கர வாகனத்தில் நின்றிருந்த மற்றவர்கள், அந்த காரை துரத்திச் சென்றனர். மேலும், சிலர் இது தொடர்பாக அந்த பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனிடையே, இருசக்கர வாகனத்தில் சிலர் அந்த காரை துடித்துப் பிடித்த நிலையில், அந்த ஓட்டுநர் தன்னுடைய காரை நிறுத்திவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால், காரில் சிக்கியிருந்த அந்த இளம் பெண்ணை அந்த பகுதி மக்கள் பத்திரமாக மீட்டனர்.
இது தொடர்பாகவும் அந்த பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த கார் ஓட்டுநரை அடுத்த சில மணி நேரங்களிலேயே தேடிக் கண்டுபிடித்து அதிரடியாக அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
மேலும், ஓடும் காரில் இருந்து கதித்து தப்பியதில் படுகாயம் அடைந்த இரு இளம் பெண்களிடமும், கடத்திச் செல்லப்பட்ட காரில் இருந்த மற்றொரு இளம் பெண்ணிடமும் போலீசார் வாக்கு மூலம் பெற்றனர்.
இதனிடையே, கால் டாக்ஸி ஓட்டுநர் பாலியல் துன்புறுத்தல் செய்ததால், ஓடும் காரில் இருந்து குதித்து இரண்டு பெண்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம், அமிர்தசரஸ் மக்களிடையே, கடும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்படுத்தி உள்ளது.