“இஸ்லாமிய பெண்கள் விரும்பியவரை திருமணம் செய்துகொள்ளலாம்” என்று, பஞ்சாப் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
“பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18 ல் இருந்து 21 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.
இதனை தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் நடப்பு குளிர்கால கூட்டத்தொடரிலேயே பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 21 ஆக உயர்த்தும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு அது சட்டமாகவும் விரைவில் நிறைவேற்றப்பட உள்ளன.
ஆனால், இதனையடுத்து “பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 21 ஆக உயர்த்தும் மத்திய அரசின் முடிவு” தொடர்பாக, சமாஜ்வாதி கட்சி எம்.பி. சயது துபெய்ல் ஹசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதில் அளித்த எம்.பி. ஹசன், “வயதுக்கு வந்த உடன் பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும்” என்று, அதிரடியாக பேசினார்.
மேலும், “வயதுக்கு வந்த பெண் 16 வயதில் திருமணம் செய்துகொண்டாலும் தவறில்லை என்றும், பெண் 18 வயதில் வாக்களிக்கும் போது ஏன்அதே வயதில் திருமணம் செய்துகொள்ளக்கூடாது?” என்றும், அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நேரத்தில் தான், பஞ்சாப் மாநிலத்தில் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த 17 வயது இளம் பெண் ஒருவர், 33 வயதுடைய இந்து நபரை திருமணம் செய்திருந்தார்.
இந்தத் திருமணத்துக்கு பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதனையடுத்து, அந்த பெண் சார்பில் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இப்படியாக, இரு தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி ஹர்நரேஷ் சிங் கில், “பருவம் எய்திய இஸ்லாமிய பெண்ணுக்கு, அவர் விரும்பும் யாரையும் திருமணம் செய்யும் உரிமை இருக்கிறது” என்று, கூறினார்.
மேலும், “அந்த பெண்ணின் முடிவில் அவரது பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் என்று யாரும் தலையிட உரிமை இல்லை என்றும், முஸ்லீம் பெண்ணின் திருமணம் என்பது முஸ்லீம் தனி நபர் சட்டத்துக்கு உட்பட்டது” என்றும், கூறினார்.
அதே போல், “மனுதாரர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்துக்கு மாறாக செயல்பட்டார் என்பதற்காக, அரசியலமைப்புச் சட்டத்தில் அவர்களுக்கான அடிப்படை உரிமைகளை பறிக்க முடியாது” என்றும், கூறி, அந்தத் தம்பதிக்கு காவல் துறை பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்றும், அதிரடியாக உத்தரவிட்டார்.
இதனையடுத்து, “பெண்களின் திருமண வயது 18 என்பதை கூட அந்த நீதிபதி மறந்துவிட்டார்” என்று, பலரும் இணையத்தில் அந்த நீதிபதியை கடுமையாக விமர்சித்து வருவகின்றனர். இதனால், இது தொடர்பான செய்திகள் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.