இந்தியா முழுவதும் பப்ஜி ஆன்லைன் விளையாட்டு செயலி உள்பட 118 செல்பேசி செயலிகளை முடக்க இந்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் முடிவு செய்தது. பல்வேறு தரப்பில் இருந்தும் மத்திய அரசுக்கு வந்த புகார்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை விளக்கம் அளித்தது.

இது தொடர்பாக அந்தத் துறை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் ஆண்ட்ராய்டு, ஐஃபோன் செல்பேசி தளங்களில் ஏராளமான செயலிகள், பயனர்களின் தரவுகளை அவர்களின் அனுமதியின்றி திருடுவதாகவும் அந்த செயலில் ஈடுபடும் விஷமிகள் இந்தியா அல்லது வெளிநாட்டு சர்வர்கள் மூலம் தரவுகளை திருடும் பணியில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் அதிகரித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம், மத்திய உள்துறை அமைச்சகம் தவறான செயலிகளை முடக்குவதற்கு பரிந்துரை செய்திருந்தன.

அதன் அடிப்படையில் நடத்திய கண்காணிப்பில் அவை பயனர்களின் தரவுகளை திருடுவது உறுதிப்படுத்தப்பட்டதாகவும், இந்திய பாதுகாப்பு அவற்றின் செயல் அச்சுறுத்தலாக அமையும் என்றும் கருதி 118 செல்பேசி செயலிகளை முடக்கியிருப்பதாக இந்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை தெரிவித்துள்ளது. முடக்கப்பட்ட செயலிகளில் பல சீனாவை மையமாகக் கொண்டு இயங்கி வருபவை.

இந்தியாவில் பப்ஜி செயலியின் தடை விதிக்கப்பட்ட நேரத்தில், இதன் ஆக்டிவ் பயனர்களின் எண்ணிக்கை 3.30 கோடி பேர் என்று கூறப்படுகிறது. ஐந்து கோடி பேர் அதை பதிவிறக்கம் செய்துள்ளனர். கொரோனா பொது முடக்க காலத்தில் இந்தியாவில் தான் இந்த செயலியை அதிக பயனர்கள் பதிவிறக்கம் செய்து விளையாடியுள்ளனர்.

இந்த செயலியில் விளையாட்டு மட்டுமின்றி வர்த்தகமும் உள்ளது. இதில் விளையாடிய பல சிறார்கள், வீட்டில் இருந்து பணத்தைத் திருடியும் வங்கிக்கடன் அட்டை, டெபிட் கார்டுகள் மூலம் விளையாட்டில் பங்கேற்று பொருட்களை வாங்கிய செயல்கள், அவை தொடர்பான குற்றப்புகார்கள் காவல்துறையில் ஏராளமாக பதிவாகியுள்ளன.

பல இடங்களில், தங்களின் பிள்ளைகளில் குறிப்பாக மாணவர்கள் அதிக அளவில் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகி வருவதாக பெற்றோர்கள் கவலைகளை வெளியிட்டு வந்தனர். இந்த விவகாரம் தேசிய அளவிலான விவாதத்தையும் தூண்டியது.

செப்டம்பரில் பப்ஜிக்கு தடை என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், முழுமையாக அது நீக்கப்படவில்லை. ஆம், விதிக்கப்பட்ட தடையினால் பப்ஜி விளையாட்டை செப்டம்பர் மாத துவக்கத்திற்கு பின்னர் இந்தியாவில் ஆண்ட்ராய்ட் யூசர்கள் ஆப்பிள் போன் யூசர்கள் என யாரும் அதிகாரபூர்வமாகப் பதிவிறக்கம் செய்ய முடியாது நிலை ஏற்பட்டதே தவிர, ஏற்கெனவே இன்ஸ்டால் செய்து விளையாடி வருபவர்கள் மட்டும் தொடர்ந்து விளையாடி வந்தனர். ஆனால் அவர்களால் அப்டேட் செய்ய முடியாத நிலை இருந்தது. இந்நிலையில் ஏற்கனவே பதிவிறக்கம் செய்தவர்களும் இன்று முதல் விளையாட நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கோடிக்கணக்கான இளைஞர்கள் விளையாடி வந்த பப்ஜிக்கும் இன்று முதல் முடிவுரை எழுதப்பட்டுள்ளது. இது பப்ஜி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. அதேநேரம் பல குடும்பங்கள் சந்தோஷமாக உள்ளன. செல்போனே வாழ்கை என்று இனி இளைஞர்கள் இருக்க மாட்டார்கள் என்று நம்புகிறார்கள். எனினும் ப்ரி பயர் போன்ற வேறு சில கேம்களில் இளைஞர்கள் ஆர்வம் காட்ட தொடங்கி இருப்பதும் ,அதற்கு முற்றுப்புள்ளி வைப்பது கடினம் என்றும் தோன்றுகிறது

பப்ஜியின் அதிகபட்சமான பதிவிறக்கங்கள் இந்தியாவிலிருந்துதான் வந்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் இந்தியாவில் பப்ஜி 17.5 கோடி முறை பதிவிறக்கம் செய்யப்பட்டு இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தது. இந்த வருடம் முதல் பாதியில் பப்ஜியின் சர்வதேச வருமானம் கிட்டத்தட்ட ரூ. 9,731 கோடியாக இருந்தது.