பிரதமர் நரேந்திர மோடியின் www.pmindia.gov.in என்ற இணையதளம் தற்போது வரை 12 இந்திய மொழிகளில் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதனை மறுவடிவமைப்பு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது புதிதாக மறுவடிவமைப்பு செய்யப்படும் இணையதளத்தை, 6 சர்வதேச மொழிகளிலும், 22 இந்திய மொழிகளிலும் கையாளும் விதத்தில் வடிவமைக்கவிருப்பதாகத் தெரிகிறது.
மேலும், இந்த மறுவடிவமைப்புக்காக, இணையதளத்தை வடிவமைப்பதில், நல்ல அனுபவமும், சிறந்த தகுதியும் வாய்ந்த நிறுவனங்கள் விண்ணப்பங்கள் அனுப்பலாம் என்று தேசிய மின்னணு நிர்வாக பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாகத் தேசிய மின்னணு நிர்வாக பிரிவு வெளியிட்டுள்ள தகவலில், பிரதமர் மோடியின் புதிய இணையதளம் ஐ.நா.,சபையால் அங்கீகரிக்கப்பட்ட அராபிக், சைனீஸ், ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்யன் மற்றும் ஸ்பானிஷ் ஆகிய 6 மொழிகள் மற்றும் 22 இந்திய அலுவல் மொழிகளில் கையாளும் வகையில் இருக்க வேண்டும். பிரதமரின் இணையதளத்திற்கு வரும் பயனர்கள் மொழிகளைத் தேர்வு செய்து இணையதளத்தில் உள்ள செய்திகளை தங்கள் மொழியில் படித்துத் தெரிந்துகொள்ள ஏதுவான அனைத்துப் பணிகளையும் அந்த நிறுவனம் செய்ய வேண்டும். எனவே அதற்குத் தகுதியான நிறுவனங்கள் இணையதளத்தை வடிவமைப்பு செய்ய விண்ணப்பிக்கலாம். மேலும், தேர்வு செய்யப்படும் நிறுவனமே பிரதமர் இணையதளத்தின் வடிவமைப்பு, மேம்பாடு, செயலாக்கம், பராமரிப்பு, மொழிபெயர்ப்பு ஆகிய பொறுப்புகளை ஏற்க வேண்டும்.
இதற்குத் தேவையான உள்ளடக்கங்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வேர்டு/பிடிஎப் வடிவத்தில் தங்களுக்கு வழங்கப்படும். இந்த உள்ளடக்கம், வடிவமைக்கப்படும் 6 சர்வதேச மொழிகளிலும், 22 இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு இணையத்தில் பதிவிட வேண்டும். அதுமட்டுமின்றி இந்த இணையதளம் அனைத்து பிரபல சமூக ஊடகங்களுடனும் ஒருங்கிணைக்கப்பட்டிருக்க வேண்டும். சமூக ஊடகங்களில் பிரதமர் பதிவிடும் தகவல்களும் இந்த புதிய இணையதளத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும். இந்த பணித்திட்டம் தொடர்பான சந்தேகங்களைப் பற்றிக் கேட்பதற்கான கடைசி தேதி ஜூலை 30 ஆகும்.தங்கள் விருப்பத்தைத் தெரிவித்து விண்ணப்பத்தை அனுப்புவதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 7 என்று தகவல்கள் வெளியிட்டுள்ளனர்.
இந்தியப் பிரதமரின் இணையதளத்தைப் புதிதாக பல்வேறு மொழிகளில் மறுவடிவமைப்பு செய்யப்படுவதற்காக, பல நிறுவனங்களிடம் பல்வேறு கருத்துகளையும், திட்டங்களையும் கேட்டு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனி பிரதமரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை 6 ஐ.நா. மொழிகளிலும் 22 இந்திய மொழிகளிலும் படிக்க முடியும்.
ஐ.நா.வின் ஆறு மொழிகள்!
அரபு, சீனம், ஆங்கிலம், பிரஞ்சு, ரஷ்யன் மற்றும் ஸ்பானிஷ்.
22 இந்திய மொழிகள்!
அசாமி, பெங்காலி, போடோ, டோக்ரி, குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கனி, மைதிலி, மலையாளம், மணிப்பூரி, மராத்தி, நேபாளி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சாந்தலி, சிந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகியவை
-பெ.மதலை ஆரோன்