மூத்த மகளின் சிகிச்சை செலவுக்காகப் பக்கத்து வீட்டுக்காரரிடம் தங்களது இளைய மகளை 10 ஆயிரம் ரூபாய்க்கு பெற்றோர் விற்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திரா மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டம் கோட்டூரில் 12 சிறுமி, ஒருவர் தனது பெற்றோரிடம் வசித்து வந்தார். இந்த சிறுமிக்கு, 16 வயதில் ஒரு அக்காவும் இருந்தார். அந்த சிறுமிகள் இருவரம், அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தனர்.

தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், சிறுமிகள் இருவரும் தங்களது பெற்றோருடன் வசித்து வந்தனர்.

இப்படியான சூழ்நிலையில், 16 வயது மூத்த மகளுக்கு திடீரென்று சுவாச நோய்ப் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து, தங்களது மகளை பெற்றோர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அந்த சிறுமிக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அந்த சிறுமிக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததால், ஒருகட்டத்திற்கு மேல் மகளின் சிகிச்சைக்கான செலவை சமாளிக்க முடியாமல், அந்த சிறுமியின் பெற்றோர் பெரிதும் தவித்து வந்து உள்ளனர்.

இந்த நிலையில், அந்த சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்துவரும் சின்ன சுப்பையாவிற்கு பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமியின் தங்கையான 12 வயது சிறுமி மீது விருப்பம் இருந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அத்துடன், அந்த 16 வயது மூத்த மகளின் சிகிச்சைக்காகப் பணம் இல்லாமல் சிறுமியின் பெற்றோர் தவிப்பதை அறிந்த பக்கத்து வீட்டில் வசித்து வந்த 46 வயதான சுப்பையா, அந்த சிறுமியின் பெற்றோருக்கு அவ்வப்போது சிறு சிறு பண உதவிகளைச் செய்து வந்து உள்ளார்.

இந்த நிலையில், சிறுமியின் குடும்ப சூழ்நிலையை நன்கு புரிந்துகொண்ட அந்த பக்கத்து வீட்டு சுப்பையா, சிறுமியின் பெற்றோரிடம் சென்று “உங்களது இளைய மகளை எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்த பெண்ணை எனக்குத் திருமணம் செய்து வைத்தால் நான் 10 ஆயிரம் ரூபாய் தருகிறேன்” என்று, கூறியிருக்கிறார்.

இதனைக் கேட்டு முதலில் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், தங்களுக்கும் வேறு வழியில்லாமல் தங்களது மூத்த மகளைக் காப்பாற்ற தங்களது இளைய மகளான 12 வயது சிறுமியை, பக்கத்து வீட்டில் வசித்து வந்த 46 வயதான சுப்பையாவுக்கு திருமணம் செய்து கொடுக்க சம்மதம் தெரிவித்து உள்ளனர்.

அதன் படியே, 46 வயதான பக்கத்து வீட்டு சுப்பையாவுக்கு, தங்களது 12 வயது மகளை, அந்த சிறுமியின் பெற்றோரே திருமணம் செய்து வைத்து உள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, “நெல்லூர் மாவட்டம் கோட்டூரில் 12 சிறுமிக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டிருப்பதாக” அங்குள்ள மாவட்ட சமூக நல மேம்பாட்டு அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.

இது தொடர்பாக விரைந்து சென்ற அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், 12 வயது சிறுமியை 46 வயதான சுப்பையா என்பவருக்கு, சிறுமியின் பெற்றோரே திருமணம் செய்து வைத்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, சிறுமியை மீட்ட சமூக நல மேம்பாட்டு அதிகாரிகள், குழந்தை திருமணம் செய்ததாக சுப்பையாவை காவல் துறையினரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

இதனால், சுப்பையா மீது வழக்குப் பதிவு செய்து போலீசார், அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், இவ்வளவு உண்மைகளும் தெரிய வந்தது.

மேலும், “இளைய மகளின் விருப்பமின்றி, அவரை சுப்பைவிற்கு திருமணம் செய்து வைத்ததும்” விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.