சீக்கிரம் கல்யாணம் நடக்க வேண்டும் என்ற வேண்டுதல் காரணமாக, முதியவரின் தலையை வெட்டி கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் படித்தவர்கள் எண்ணிக்கை முன்பைவிட, தற்போது அதிகரித்துக் காணப்படுகிறது. ஆனால், பழங்காலத்தில் இருந்த சில மூட நம்பிக்கை பழக்கங்கள் மட்டும் இன்றும் மாறாமல் அப்படியே இருப்பது, பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது என்பதற்கு, இந்த செய்தியே ஒரு சாட்சி.

உத்தரப் பிரதேசம் மாநிலம் கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதான உதய் பிரகாஷ் சுக்லா என்ற இளைஞருக்கு மொத்தம் 5 சகோதரர்கள் உள்ளனர். ஆனால், அந்த 5 சகோதரர்களுக்கும் திருமணம் ஆகாமல் இருந்துள்ளது. திருமணம் தொடர்பாகப் பெண் பார்க்கச் சென்றால், எந்த வரனும் அமையாமல் இருந்தது. அதையும் தாண்டி பெண் பார்க்கச் சென்றால், எதாவது ஒரு தடங்கள் தொடர்ந்து தட்டிக்கொண்டே இருந்துள்ளது.

இதனால், உதய் பிரகாஷ் சுக்லா கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள ஒரு சாமியாரிடம் அவர் ஆலோசனை கேட்டுள்ளார்.

அப்போது, “வயதான ஒருவரைத் தூக்கத்தில் தலை துண்டித்து வெட்டி விட்டால், உங்கள் அனைவருக்கும் உடனே திருமணங்கள் நடைபெறும்” என்று, அந்த சாமியார் ஆசை வார்த்தை கூறி உள்ளார்.

அதன்படியே, அந்த பகுதியில் இரவில் தூங்கிக்கொண்டு இருந்த சுமார் 60 வயது மதிக்கத் தக்க ஒரு முதியவரின் தலையை, உதய் பிரகாஷ் சுக்லா துண்டித்துள்ளார். இதில், அவர் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், விரைந்து வந்த போலீசார் உதய் பிரகாஷ் சுக்லாவை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

மேலும், உதய் பிரகாஷ் சுக்லா கொலை செய்ய பயன்படுத்திய கூர்மையான முனைகள் கொண்ட ஆயுதம் ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, உதய் பிரகாஷ் சுக்லாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கொலை செய்யப்பட்ட முதியவருக்கும், உதய் பிரகாஷ்

சுக்லாவுக்கும் எந்த வித முன்விரோதமும் இல்லை என்பது தெரிய வந்தது. அத்துடன், சாமியாரின் பேச்சைக் கேட்டே, சீக்கிரம் கல்யாணம் ஆக வேண்டும் என்ற ஆசையிலேயே அவர் இந்த கொலையைச் செய்திருப்பதும் தெரிய வந்தது. மேலும், கொலைக்கு வேறு எதாவது காரணம் இருக்கிறதா என்ற கோணத்திலும் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, சீக்கிரம் கல்யாணம் நடக்க வேண்டும் என்பதற்காக 60 வயது முதியவரின் தலையை வெட்டிய சம்பவம், உத்தரப் பிரதேசத்தில் அதிர்ச்சியையும், பீதியையும் தெரிவித்துள்ளது.