ஓய்வு பெற்ற போர் விமானம் விற்பனை என்று olx ல் விளம்பரம் செய்யப்பட்டதாகச் செய்திகள் வெளியாகி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் தேவையில்லாத பொருட்கள் என அனைத்தும் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இப்படி ஆன்லைன் விற்பனையில் முதன்மை வகிக்கிறது olx விற்பனை.

தற்போது வீடு வாடகை முதற்கொண்டு, பலரும் olx ல் விளம்பரம் படுத்தத் தொடங்கி உள்ளனர். அந்த அளவுக்கு, இந்தியாவில் olx ல் நிறுவனம் ரொம்பவும் பிரபலம் அடைந்துள்ளது.

இந்நிலையில், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானத்தை olx ல் விற்கப்போவதாக, ஒரு கும்பல் விளம்பரம் செய்துள்ளது.

அதாவது, இந்திய விமானப்படையில் கடந்த 28 ஆண்டுகள் சேவை செய்த fighter ரக விமானம், இந்திய விமானப்படை சார்பாக, உத்தரப் பிரதேசம் மாநிலம் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்துக்காக கடந்த 2009 ஆம் ஆண்டு, அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இதனால், அந்த போர் விமானம், அந்த பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

தற்போது, அந்த போர் விமானத்தை ஒரு மர்ம கும்பல் ஒன்று, 9 கோடியே 99 லட்சம் ரூபாய்க்கு விற்கப் போவதாக olx ல் விளம்பரம் செய்திருக்கின்றனர்.

இந்த olx ல் விளம்பரமானது, அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தின் கவனத்திற்குச் சென்றுள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பல்கலைக்கழக நிர்வாகிகள், இது குறித்து உடனடியாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். இந்த தகவலும் இணையத்தில் பரவியது. இதனையடுத்து, குறிப்பிட்ட அந்த விளம்பரம், உடனடியாக நீக்கப்பட்டது.

பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கவே சில மர்ம நபர்கள், இது போன்ற சட்ட விரோத செயலில் ஈடுபட்டதாகப் பல்கலைக்கழக நிர்வாகிகள் தரப்பில் கூறியுள்ளனர்.

ஓய்வு பெற்ற போர் விமானம் ஒன்று, விற்பனையாவதாக olx ல் விளம்பரம் செய்யப்பட்ட செய்தி, இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், தமிழகத்தில் கையில் தேசியக் கொடியுடன் பிச்சை எடுத்தவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ஒண்ணுபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ், அதே பகுதியில் பட்டுச் சேலை நெசவு வேலை செய்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டார்.

இதனிடையே, அமைப்பு சாரா தொழிலாளர் திட்டத்தில் பல்வேறு துறைகளில் முன்பதிவு செய்தவர்களுக்கு அதிலும் நெசவாளர் குடும்பங்களுக்கு நிவாரணமாக 2 ஆயிரம் ரூபாய் அவரவர் வங்கிக் கணக்கில் தமிழக அரசு செலுத்தியது.

அத்துடன், அமைப்பு சாரா தொழிலாளர் நலத்துறை திட்டத்தில் முன் கூட்டியே சேராதவர்களுக்கு அரசு வழங்கக்கூடிய 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் கிடைக்காத விரக்தியில், தொழிலாளி சுரேஷ் அரசிடம் நிவாரணம் கேட்டு ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே மேலாடையின்றி ஒரு கையில் தேசியக் கொடியைப் பிடித்துக் கொண்டும், இன்னொரு கையில் தட்டை ஏந்திக்கொண்டு, “அரசே நிவாரணம் கொடு” தனி மனித முழக்கம் எழுப்பினார்.

இதனைப் பார்த்த ஆரணி நகர போலீசார், சுரேசை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அதன் பிறகு, அவர் மீது தேசியக்கொடியை அவமதிப்பு செய்ததாக வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.