தமிழகத்தில், தற்போது அரசு பணிகளில் நியமனம் இட ஒதுக்கீடு அடிப்படையில் நடத்தப்படுகிறது. இதேபோல் பதவி உயர்வுக்கும் இட ஒதுக்கீடு முறைதான் பின்பற்றப்படுகிறது. இந்த இட ஒதுக்கீட்டால் ``தங்களின் பதவி உயர்வு பாதிக்கப்படுகிறது. எனவே, இந்த பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டை பின்பற்றும் தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" எனக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ``பணி நியமனத்தில் இட ஒதுக்கீட்டை பின்பற்றலாம். பதவி உயர்வில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவது சட்டவிரோதமானது" என்று முதன்முதலில் கடந்த 2015ல் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 2016ல் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் (பணி நிபந்தனை) சட்டம் 2016 என்ற சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. அதில், அரசு ஊழியர்களின் பதவி உயர்வும் இட ஒதுக்கீடு அடிப்படையில் நடத்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த சட்டப் பிரிவுகளை ரத்து செய்யக்கோரியும், தங்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்குமாறு உத்தரவிடக்கோரியும் பெருந்துறையை சேர்ந்த நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ராஜா, சென்னையை சேர்ந்த நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அந்த வழக்கை நவம்பர் மாதம் விசாரித்த நீதிபதிகள் அளித்த உத்தரவில், ``சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்காமல் இட ஒதுக்கீடு முறையில் பதவி உயர்வு வழங்கினால் ஏற்கனவே உள்ள இட ஒதுக்கீட்டின் அளவு அதிகரித்துவிடும். இந்த முறையை தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் கடந்த 2003 முதல் கடைபிடித்து வந்துள்ளது. அதை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவு உச்ச நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மேலாக தமிழக அரசு 2016ல் சட்டத்தை இயற்றி இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கி வருகிறது.தமிழக அரசின் இந்த நடைமுறை அரசியலமைப்பு சரத்து 16ன் கீழ் சட்ட அங்கீகாரம் பெறப்படவில்லை. மக்கள் நலன் காக்கும் அரசு அனைவரின் நலனையும் மனதில் கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் பகுத்தறிவுடன் கூடிய சமநிலையுடன் அரசு இருக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. எனவே, அரசின் இந்த நடைமுறையில் எந்த நேர்மைத்தன்மையையும் இந்த நீதிமன்றம் கண்டறியவில்லை. அரசின் நிலைப்பாடு சரிதான் என்பதற்கான ஆவணங்களும் இல்லை. எனவே, இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவது சட்டவிரோதமானது. எனவே, மனுதாரர்களுக்கு 12 வாரங்களுக்குள் பதவி உயர்வுக்கான சீனியாரிட்டி கணக்கிட வேண்டும்" என்று கூறப்பட்டது.
இருப்பினும், மறு ஆய்வுக்காக மீண்டும் இந்த வழக்கு சீராய்வு மனு போடப்பட்டது. இதில், இன்றைய தினம் `இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படக் கூடாது, தகுதி மற்றும் பணிமூப்பு அடிப்படையில்தான் பதவி உயர்வு வழங்க வேண்டும்' என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் இருவரது வழக்கில் பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவில், இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கக் கோரும் தமிழக அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், பணியிடங்களில், இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படக் கூடாது, தகுதி மற்றும் பணிமூப்பு அடிப்படையில்தான் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.