“இந்தியா, மலேசியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கு யாரும் போக வேண்டாம்” என்று, சாமியார் நித்தியானந்தா எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் 2 வது அலையாக வீசி தற்போது சற்று ஓய்ந்திருக்கிறது.
கடந்த காலங்களில், “இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த போது, இந்தியாவுக்கு அமெரிக்க மக்கள் யாரும் பயணிக்க வேண்டாம்” என்று, அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா 2வது அலையின் தொற்று பரவல் சற்று குறைந்து வருகிறது என்றாலும், கடந்த சில நாட்களாக கொரொனா பாதிப்பானது இந்தியாவின் சில பகுதிகளில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.
அதன் படி, இந்தியாவில் நேற்று முன் தினம் ஒரே நாளில் 37,593 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு இருந்தது.
அதன் தொடர்ச்சியாக, கடந்த 24 மணி நேரத்தில் 46,164 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதனால், இந்தியாவில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கையானது 3 கோடியே 25 லட்சத்து 58 ஆயிரத்து 530 ஆக உயர்ந்திருக்கிறது.
இந்த சூழலில் தான், பாலியல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள சாமியார் நித்தியானந்தா, தற்போது வரை தலைமறைவாக இருந்து வருகிறார்.
அவர், “கைலாசா” என்கிற புதிய நாட்டை உருவாக்கி, அதில் வசித்து வருவதாகவும் அவரே கூறி வந்தார்.
இந்த சூழலில் தான், சாமியார் நித்தியானந்தா அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வீடியோ வாயிலாகத் தனது பக்தர்களிடம் பேசி, தன்னுடைய கருத்துக்களைக் கூறி வருகிறார்.
இந்நிலையில், சாமியார் நித்தியானந்தா தற்போது வெளியிட்டிருக்கும் புதிய வீடியோவில், “இந்தியா, மலேசியா, நேபாளம், இந்தோனேசியா ஆகிய 4 நாடுகளுக்கும் யாரும் செல்ல வேண்டாம்” என்று, எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
அத்துடன், “குறிப்பிட்ட இந்த 4 நாடுகளைச் சேர்ந்தவர்கள் யாரும், வேறு இடங்களில் இருந்தால் அவர்கள் அனைவரும் அங்கேயே சில காலம் இருந்துவிடுங்கள்” என்றும், அவர் அறிவுறுத்தி உள்ளார்.
“பிரளயம் முடிந்து, வாழ்க்கை புதுமையாய் மலரும் என்றும், ஆனால் தற்போது உயிரோடு வாழ்வதே இந்த ஆண்டின் உச்ச நன்மையும், சுகமும், வரமும்” என்று, குறிப்பிட்டுப் பேசிய சாமியார் நித்தியானந்தா, “குறிப்பிட்ட இந்த 4 நாடுகளுக்குச் செல்லாதீர்கள்” என்று, மீண்டும் அறிவுறுத்தி உள்ளார்.
“வாழ்க்கை என்பதே வரவு என்றும், மரணம் என்பது செலவு என்றும், இந்த ஆண்டின் நல்ல வரவேற்பு நம்மைக் காத்துக்கொள்வது தான்” என்றும், அவர் கருத்து கூறி உள்ளார்.
“என்னோடு மங்களமாய் இணைந்திருங்கள் என்றும், நல்லதெல்லாம் செய்கின்றேன்” என்றும், சாமியார் நித்தியானந்தா தெரிவித்துள்ளார். நித்தியின் இந்த புதிய வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.