உக்ரைனில் குண்டுவீச்சில் உயிரிழந்த நவீனின் உடலை மருத்துவ படிப்புக்காக தானமளிக்க முடிவு செய்துள்ளோம் என அவரது தந்தை பேட்டியில் கூறியுள்ளார்.
உக்ரைன் நாடு மீது ரஷியா கடந்த 24-ம் தேதி போர் தொடுத்தது. முதல் நாளில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்கினர். அந்நாட்டின் விமான நிலையம், துறைமுகங்கள், ராணுவ நிலைகள் ஆகியவற்றை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் 100-க்கும் மேற்பட்ட ராணுவ தளவாட கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதாக ரஷியா தெரிவித்தது.
இதில் இரு நாட்டு தரப்பிலும் பலர் உயிரிழந்து உள்ளனர். போரை முன்னிட்டு லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர். அவர்களில் இந்தியர்களும் அடங்குவர். மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி ஆகிய நாடுகளில் இருந்து வெளியேறி இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர். இந்நிலையில் ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் உக்ரைன் சின்னாபின்னமாகி வருகிறது. அங்கு ஏவுகணை, பீரங்கி தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. போர் பதற்றத்தால் உக்ரைனில் வாழும் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளை நோக்கி தஞ்சம் அடைந்து வருகிறார்கள். கல்வி, வேலைவாய்ப்புக்காக உக்ரைனுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சென்றிருந்தனர்.
மேலும் குறிப்பாக தமிழகத்தில் இருந்து 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் உக்ரைன் பல்கலைக்கழகங்களில் மருத்துவம், என்ஜினீயரிங் படித்து வருகிறார்கள். மெட்ரோ சுரங்கங்களிலும், பதுங்கு குழிகளிலும் பதுங்கி உயிரை கையில் பிடித்துக்கொண்டிருந்த அவர்களை மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. உக்ரைன் வான்பகுதி மூடப்பட்ட நிலையில், அண்டை நாடுகளின் எல்லைக்கு வரவழைத்து இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. ‘ஆபரேசன் கங்கா’ என்ற பெயரில் இந்த மீட்புப்பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் உக்ரைன் மீது ரஷியா இன்று 24-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் ஆகிய நகரங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன. இதனால், உக்ரைன் - ரஷிய படைகள் இடையே தீவிர சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தபோதும் அவை தோல்வியிலேயே முடிகின்றன.
உக்ரைனும் தனியாளாக ரஷியாவை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 1-ம் தேதி ரஷிய படையினர் உக்ரைன் மீது குண்டுவீசியபோது, கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் சலகேரியை சேர்ந்த நவீன் என்ற மருத்துவ மாணவர் உயிரிழந்தார். மாணவர் இறந்த செய்தி அறிந்ததும் பிரதமர் மோடி, கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை, மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் மாணவரின் பெற்றோரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தனர். அப்போது, மாணவரின் உடலை மீட்டு தாயகம் கொண்டுவரக்கோரி மாணவரின் பெற்றோர் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.
பாதுகாப்பு குறித்த உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தின் போது பிரதமர் மோடி, உக்ரைனில் உயிரிழந்த மாணவர் நவீனின் உடலை மீட்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் மாணவர் நவீனின் உடல் வருகிற திங்கட்கிழமை அதிகாலையில் கர்நாடக விமான நிலையத்திற்கு வந்து சேரும் என பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
மேலும் இறுதி சடங்குகளுக்காக மகனின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டுகோள் விடுத்த, நவீனின் தந்தை சங்கரப்பா செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், உக்ரைனில் குண்டுவீச்சில் உயிரிழந்த நவீனின் உடல் வருகிற 21-ம் தேதி அதிகாலை 3 மணியளவில் பெங்களூருவுக்கு வந்து சேரும். அதன்பின்னர் பொதுமக்கள் பார்வைக்கு உடல் வைக்கப்படும்.
நவீனின் உடலை மருத்துவம் படிக்க கூடிய மாணவ மாணவிகளுக்காக தேவநகரியில் உள்ள எஸ்.எஸ். மருத்துவமனைக்கு தானமளிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார். 21 வயதுடைய நவீன், உக்ரைனின் கார்கிவ் நகரில் உள்ள தேசிய மருத்துவ பல்கலை கழகத்தில் படித்து வந்த மாணவர் ஆவார். இந்திய மருத்துவ மாணவரான நவீனின் மரணம் பற்றி விசாரணை மேற்கொள்வோம் என்று ரஷியா தெரிவித்து உள்ளது.