கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸின் செல்லப்பிள்ளையுமான சுரேஷ் ரெய்னா மும்பையில் திடீரென்று கைது செய்யப்பட்டு உள்ள சம்பவம், கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த அண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் இருந்து, சுரேஷ் ரெய்னா விலகி நாடு திரும்பினார். இதன் காரணமாக, சென்னை அணி தொடர்ச்சியா தோல்வியைச் சந்தித்து, ப்ளே ஆஃப் சுற்றுக்கூட செல்ல முடியாத நிலை உருவாகி வெளியேறியது.
இதனையடுத்து, பல்வேறு கிரிக்கெட் சார்ந்த பணிகளை சுரேஷ் ரெய்னா செய்து வருகிறார். சமீபத்தில் கூட, ஜம்மு காஷ்மீரில் இருக்கும் இளைஞர்களுக்கு கிரிக்கெட் பயிற்சிகளை அளித்து வந்தார். இப்படியாக, சுரேஷ் ரெய்னா தன்னை பல்வேறு விஷயங்களில் பிசியாக வைத்துக் கொண்டு வந்தார்.
அத்துடன், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்காக தற்போது சுரேஷ் ரெய்னா தீவிரமாகத் தயாராகி வருகிறார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு விதிகள் அமலில் உள்ள நிலையில், க்ளப் மற்றும் ஹோட்டல்களில் ஆட்டம், பாட்டம் போன்ற கொண்டாட்டங்களுக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில், மும்பை விமான நிலையம் அருகே உள்ள ட்ராகன்ஃப்ளை என்ற க்ளப்பில் விதிமுறையை மீறி பார்ட்டி நடைபெற்று வருவதாக, மும்பை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்து உள்ளது.
இதனால், குறிப்பிட்ட அந்த க்ளப்பில் ரெய்டுக்கு சென்ற போலீசார், பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா மற்றும் பாலிவுட் பாடகர் குரு ரந்தவா, பாலிவுட் பிரபலம் சுசானே கான் உள்ளிட்ட அங்கு இருந்த 34 பேரை அதிரடியாகக் கைது செய்தனர்.
அதன் பின்னர், சுரேஷ் ரெய்னா மற்றும் பாலிவுட் பாடகர் குரு ரந்தவா, பாலிவுட் பிரபலம் சுசானே கான் உள்ளிட்டோர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் மீது கொரோனா விதிகளை மீறி செயல்பட்டதாகவும், கூட்டமாகக் கூடியதாகவும், அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி இரவில் நீண்ட நேரம் கிளப்பில் இருந்ததாக கூறி மும்பை போலீசார், பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முக்கியமாக, சட்டப்பிரிவு 188, 269, 34 கீழ் சுரேஷ் ரெய்னா உட்பட 34 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்களுடன் கிளப்பில் பணியாற்றிய நபர்களும் கைது செய்யப்பட்டு உள்ளனர். அதே நேரத்தில், கைது செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே சுரேஷ் ரெய்னா, சுசானே ஆகியோர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர் என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே, சுரேஷ் ரெய்னா கைது செய்யப்பட்ட இந்த சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
மேலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் மீண்டும் வேகம் எடுத்துள்ள கொரோனா வைரஸ் காரணமாக, அந்த மாநில அரசு, நேற்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை
விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அத்துடன், பிரிட்டனில் பரவி வரும் புதிய வகையிலான கொரோனா வைரஸ் மாறுபாடு குறித்த கவலைகளுக்கு மத்தியில்
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மும்பை மாநகரில் இரவு நேரங்களில் ஊரடங்கு உத்தரவை மீண்டும் அறிவிக்கப்பட்ட பிறகும், இது போன்ற விதிமுறைகள் மீறப்பட்டு வருவதாகவும் போலீசார் அதிகாரிகள் கவலைத் தெரிவித்துள்ளனர்.