பிரபல கவர்ச்சி நடிகையான சன்னி லியோன் நடனமாடியுள்ள ஒரு பாடலுக்காக, அவருக்கு மத்தியப் பிரதேச மாநில உள்துறை அமைச்சரான நரோதம் மிஸ்ரா, கடும் எச்சரிக்கையும் கெடுவும் விதித்துள்ளது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சரிகம மியூசிக் நிறுவனத்தால் கடந்த சில நாட்களுக்கு முன்பு “Madhuban mein Radhika” என்ற இசை ஆல்பம் வெளியிடப்பட்டது.
நடிகை சன்னி லியோனே - கனிகா கபூர் ஆகியோர் அசத்தலாக நடனமாடி இருக்கும் இந்த ஆல்பம் சாங், வெளியானது முதலே பெரும் சர்ச்சைக்கு வித்திட்டு இருக்கிறது.
அதுவும், நடிகை சன்னி லியோனே இந்த பாட்டுக்காக மிகவும் கவர்ச்சிகரமான வகையில், தனது நடனத்தை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.
முக்கியமாக, “இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில், பிரபல நடிகையான சன்னி லியோன் இந்த பாடலுக்கு நடனம் ஆடியிருப்பதாகவும் கண்டனங்கள் எழுந்து உள்ளன.
அதாவது, ‘கிருஷ்ணர் - ராதையின்’ காதலை பேசும் விதமாக, “மதுபான் மெய்ன் ராதிகா நாச்சே” என்ற பாடலுக்கு நடிகை சன்னிலியோன் நடனமாடி இருந்தார்.
“இந்த வீடியோ தான், இந்து மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக இருப்பதாக” கூறி, உத்தரப் பிரதேசத்தின் இந்து சாமியார்கள் கண்டனம் தெரிவித்தனர்.
அத்துடன், “இந்த பாடலை நீக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதிமன்றம் செல்வோம் என்றும், நடிகை சன்னிலியோன் பொது மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றும், அவர்கள் கடுமையாக எதிர்த்து உள்ளனர்.
இது தொடர்பாக, பேசிய மத்தியப் பிரதேச மாநில உள்துறை அமைச்சரான நரோதம் மிஸ்ரா, “சிலர் தொடர்ந்து இந்து மத உணர்வுகளை புண்படுத்தி வருகின்றனர் என்றும், ராதை எங்களின் கடவுள். அவரை நாங்கள் வணங்குகிறோம். அவருக்காக பல இடங்களில் கோயில்கள் உள்ளன” என்றும், குறிப்பிட்டார்.
அத்துடன், “ஷாரிஃப் தனது மதத்தை குறிப்பிட்டு இப்படி ஒரு பாடலை உருவாக்குவாரா? சன்னி லியோனே, ஷாரிஃப் மற்றும் தோஷி ஆகியோர் இதனை புரிந்து கொள்ள வேண்டுமென நான் எச்சரிக்கிறேன்” என்றும், அவர் வெளிப்படையாகவே கூறியுள்ளார்.
மேலும்,“ அடுத்த 3 நாட்களில் அந்த பாடலை அவர்கள் நீக்காவிட்டால், அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், அவர் கெடு விதித்து உள்ளார்.
மத்தியப் பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோதம் மிஸ்ராவின் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து, பாடலை வெளியிட்ட சரிகம நிறுவனம், “மதுபான்” பாடலின் தலைப்பு மற்றும் பாடல் வரிகளை அடுத்த 3 நாட்களுக்குள் மாற்றுவதாக தற்போது அறிவித்து உள்ளது.
இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “மதுபான் பாட்டு ஏற்படுத்திய சமீபத்திய சர்ச்சைகள் காரணமாகவும், சக நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், இந்த பாட்டின்ன் தலைப்பு மற்றும் பாடல் வரிகளை மாற்றி அமைக்க இருக்கிறோம்” என்றும், கூறியுள்ளது.
“பழைய பாட்டுக்கு பதிலாக புதிய பாடல் அனைத்து தளங்களிலும் அடுத்த 3 நாட்களில் மாற்றப்படும்” என்றும், அந்த நிறுவனம் தற்போது விளக்கம் அளித்து உள்ளது.