தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கொரோனாவுக்கான இரண்டாவது அலை எச்சரிக்கையும் தொடர்ந்து வந்துக் கொண்டிருக்கின்றன. அதேபோல பசுமை தீர்ப்பாயத்திலிருந்து, காற்று மாசுபாட்டை குறைப்பதற்கான வழிமுறைகளும் நெறிமுறைகளும் தொடர்ச்சியாக அறிவுறுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில், பட்டாசு வெடிக்க இரண்டு மணி நேரத்துக்கு மட்டுமே அரசு அனுமதி தந்திருப்பது, குறிப்பிடத்தக்கது. அதேநேரம், இந்தியாவின் பல மாநிலங்களில், பட்டாசு வெடிக்க தடை போடப்பட்டுள்ளது. பட்டாசு மீதான தடைகள், கொரோனா ஊரடங்கில் தவித்து தற்போது இயல்புக்கு திரும்பிக் கொண்டிருக்கும் தொழிலாளர்களை பாதிக்கும் எனக்கூறி, பட்டாசுகளுக்கு தடை விதிக்க வேண்டாம் என அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பட்டாசு மட்டுமன்றி, வேறு சில கொண்டாட்ட பொருள்களும் இந்நேரத்தில் அதிகம் வாங்கப்படும் என்பதால், அதுசார்ந்த அறிவுரைகளும், மக்களுக்கு தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. அதில் ஒன்றாக, இநாட்டு மக்கள் அனைவரும் இந்திய கைவினைப் பொருட்களை அதிக அளவில் பயன்படுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி, இன்று (நவம்பர் 11) கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் மட்டுமன்றி, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானியும் இதுகுறித்து பேசியிருக்கிறார். அவர் கூறியுள்ளதாவது : “கடந்த ஒன்பதாம் தேதி பிரதமர் விடுத்த வேண்டுகோளை அடுத்து, உள்நாட்டுத் துணிகள், கைவினைப் பொருள்களின் வர்த்தகத்தை ஊக்குவிக்க நாம் அனைவரும் ஒன்றிணைவோம். சிறு அகல் விளக்காக இருக்கட்டும், நாம் அன்றாடம் பயன்படுத்தும் துணி வகைகள், படுக்கை விரிப்புகள், திரைச்சீலைகளாக இருக்கட்டும், நமது அன்பிற்குரியவர்களுக்கான அன்பளிப்பாக இருக்கட்டும்.. இந்த தீபாவளியை முன்னிட்டு நாம் வாங்கும் அனைத்துப் பொருள்களும் நம்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்களாக அமையட்டும். இந்திய நெசவாளர்கள், கைவினைக் கலைஞர்கள், உள்நாட்டு மற்றும் சிறிய வணிகர்களிடமிருந்து நீங்கள் வாங்கும் பொருட்கள் குறித்து ட்விட்டர், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிர்வதுடன், #Local4Diwali என்ற ஹேஷ்டேகையும் பயன்படுத்தி தீபாவளி விற்பனையை ஊக்குவிக்கலாம். துணி வகைகள், கைவினைப் பொருட்கள், அல்லது தீபாவளிக்கு வாங்கும் பரிசுப்பொருட்களை புகைப்படம் எடுத்து அதை விற்பனை செய்பவரையும் குறிப்பிட்டு #Local4Diwali என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தவும். இதுபோன்ற சவாலான தருணங்களில் உங்களது ஆதரவினால் ஏராளமானோருக்கு பெரும் உதவியாக இருக்கும்.” என்று வலியுறுத்தியுள்ளது.
இப்படியாக உள்ளூர் பொருட்களுடன் தீபாவளியை கொண்டாட வேண்டும் என பொதுமக்களை மத்திய ஜவுளி அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. கொரோனா அச்சத்துக்கு இடையே கொண்டாடப்படும் இந்த தீபாவளியில், கொரோனாவால் முடங்கிப்போன கைவினை கலைஞர்களின் வாழ்வுக்கு, உதவ முடியும் என்றால், அதை செய்வதுதானே சரியாக இருக்கும்!?