கேரள மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தெலுங்கனா உள்ளாட்சி தேர்தலைப் போல் தீவிர பிரச்சார செய்யவில்லை என்றாலும் கேரள மாநிலத்தில் பாஜக வேரூன்ற முனைப்பு காட்டி வருகிறது. இன்னும் நான்கு மாதத்தில் கேரளாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னோட்டமாக இந்த உள்ளாட்சித் தேர்தலை அரசியல் வட்டாரங்கள் அணுகுகிறார்கள்.
கேரள தங்கக் கடத்தல் வழக்கு ஆளும் கம்யூனிஸ்ட் அரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த வழக்கு தொடர்பாக ஆளுங்கட்சியின் பல்வேறு முக்கிய தலைவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றசாட்டை முன்வைத்து பாஜக தேர்தல் பிரச்சாரம் செய்து வந்தது. இந்த தேர்தலில் இடதுசாரிகள் காங்கிரஸ் , பாஜக என மும்முனைப் போட்டி நிலவியது.
மூன்று கட்டங்களாக நடந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை 244 மையங்களில் இன்று காலை தொடங்கியது.
ஒன்றிய பஞ்சாயத்துகளில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி 103 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 49 இடங்களிலும் , மாவட்ட பஞ்சாயத்துகளில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி 9 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 5 இடங்களிலும் , மாநகராட்சிகளில் இடது ஜனநாயக முன்னணி 3 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 3 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.
அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தேர்தல் ஆணையத்தில் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. மேலும் சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரத்தையும் முன்னிலைப்படுத்தி எதிர்க்கட்சிகள் தேர்தல் களம் கண்டனர்.
இந்நிலையில் அனைத்து பகுதியிலும் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. இரண்டாவது இடத்தை காங்கிரஸ், மூன்றாவதாக பாஜக இடம்பெற்று வருகிறது.