“தவறான எண்ணத்துடன் பெண்ணை தொட்டால், அது பலாத்கார வரம்புக்குள் வரும்” என்று, கேரள உயர் நீதிமன்றம் அதிரடியாகக் கூறியுள்ளது.

“பெண் என்றால், அவள் உடல் மட்டும்தானா?” என்ற ஒரு கேள்வி, சமூகத்துக்குப் பலராலும் பல விதங்களில் கேட்கப்படும் ஒரு கேள்வியாக எல்லோர் முன்பும் நிற்கிறது.

அதே போல், “ஒரு சமூகம், பெண் மீது கொண்டுள்ள பார்வையை வைத்தே, அந்த சமூகத்தின் நாகரிக வளர்ச்சியை எடைபோட முடியும்” என்கிறது, இன்னொரு நாகரிக சமூகம்.

இப்படியாக, பெண்ணின் உடல் சார்ந்த அரசியல் ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு சமூகத்திலும் வெவ்வேறு விதமாகப் பிரதிபலித்துக்கொண்டு தான் இருக்கிறது.

அத்துடன், பெண்கள் அனைத்து துறைகளிலும் பாலியல் தொல்லைகளைச் சந்தித்துக்கொண்டு தான் வருகின்றனர். அதன் படி, இந்தியாவில் 60 சதவீதம் பெண்களுக்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மூலமே பாலியல் தொந்தரவுகள் ஏற்படுவதாகக் கடந்த கால புள்ளி விவரங்கள் கூறுகிறது.

இதனால், “குடும்பத்தினர் மீது பழிபோடவும், அவர்களை சமூகத்தில் குற்றவாளிகளாக நிறுத்தவும் பயப்படும் பல பெண்கள், இந்த கொடுமைகளை எல்லாம் வெளியில் சொல்லாமல், தனக்குள்ளாகவே மூடி மறைத்துக்கொள்கிறார்கள்.

அதே நேரத்தில், “ஒரு பெண்ணின் அனுமதியில்லாமல் பாலியல் ரீதியான எண்ணத்துடன் பெண்ணின் உடலில் எந்த பகுதியைத் தொட்டாலும்; அது பலாத்கார வரம்புக்குள் வரும்” என்று, கேரள உயர் நீதிமன்றம் தற்போது கூறியிருக்கிறது.

அதாவது, கேரள மாநிலம் எர்ணாகுளம் அடுத்து உள்ள மூவாற்றுபுழா பகுதியை சேர்ந்த சந்தோஷ், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அந்த பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகப் புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், குற்றம்சாட்டப்பட்ட சந்தோஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கு, கேரளாவில் உள்ள மூவாற்றுபுழா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, “குற்றச்சாட்டுக்கு ஆளான சந்தோஷ்க்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து” அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்த சந்தோஷ், கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

அந்த மனுவில், “இந்தியத் தண்டனை சட்டம் 375 படி, நான் பலாத்காரம் செய்யவில்லை என்றும், இதனால் என் மீதான தண்டனையைக் குறைக்க வேண்டும்” என்றும், அவர் மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் வினோத்சந்திரன், சியாத் ரகுமான் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், “ஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல், பாலியல் ரீதியான எண்ணத்துடன் பெண்ணின் உடலில் எந்த இடத்தில் தொட்டாலும்? அது பாலியல் பலாத்கார குற்ற வரம்புக்குள் வரும்” என்று, தெரிவித்தனர்.

“அதன் படி, நீங்கள் செய்ததும் குற்றமே என்றும், இதன் காரணமாக, உங்கள் மீதான தண்டனையைக் குறைக்க முடியாது” என்றும், நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில், “பாதிக்கப்பட்ட பெண், சிறுமி என்பதை போலீசார் நிரூபிக்கத் தவறியதால், சந்தோஷ் மீது பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என்றும், நீதிபதிகள் உத்தரவிட்டனர்.