மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் (ISRO) ககன்யான் (Gaganyaan) திட்டம் விரைவில் தொடங்கப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.
விண்வெளி ஒத்துழைப்புத் துறையில் இந்தியா, 59 நாடுகளுடன் 250 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது, இவை இந்தியாவின் திறன்களை மேம்படுத்துவதோடு, விண்வெளி துறையை மேம்படுத்த விரும்பும் பிற நாடுகளும் பயனடையும் என இஸ்ரோ தலைவர் டாக்டர் கே.சிவன் தெரிவித்தார். விண்வெளி தொழில்நுட்ப துறையில், ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ் ஜப்பான் மற்றும் இஸ்ரேலுடன் முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது என அவர் கூறினார்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான (இஸ்ரோ) விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தை வருகிற 2022-ம் ஆண்டு செயல்படுத்த உள்ளது. இதற்காக ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
இந்த திட்டத்திற்காக இந்திய விமானப்படையில் இருந்து 25 விமானிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் 4 பேர் இறுதியாக தேர்வு செய்யப்பட்டனர். இந்த 4 பேருக்கும் ரஷியாவில் காகரினில் உள்ள காஸ்மோனட் பயிற்சி மையத்தில் கடந்த பிப்ரவரி 10-ந்தேதி பயிற்சி தொடங்கியது.
ஒடிசா மாநில விமானப்படையை சேர்ந்த கமாண்டரான நிகில் ராத் உள்ளிட்ட 4 விமானிகளும் முதல் கட்ட பயிற்சியை முடித்து உள்ளனர். இவர்கள், எல்லா சூழல்களிலும், அனைத்து நிலப்பரப்பு பகுதிகளிலும் குழு நடவடிக்கைகளாக செயல்படுவது குறித்த பயிற்சியை முடித்துள்ளனர்.
இந்நிலையில் விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டம் தாமதமாகலாம் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அவர் கூறுகையில், ``இஸ்ரோவின் பல்வேறு மையங்களில் பணியாற்றிய 70-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக ராக்கெட் உதிரிபாகங்கள் தயாரிக்கும் பணிகள் தொய்வடைந்துள்ளதால் தாமதமாகலாம். குறித்த காலத்திற்குள் திட்டத்தை செயல்படுத்த இயலாத நிலை உள்ளது. விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டம் தாமதமாகலாம்" என்று அவர் கூறினார்.
இந்திய விண்வெளி நிறுவனத்தின் தலைவர் K.Sivan சர்வதேச விண்வெளித்துறை மாநாட்டில் (International Austronautical Congress -IAC 2020) அவர் உரையாற்றினார். அப்போது இந்தியாவின் மனித விண்வெளிப் திட்டமான ககன்யான் திட்டப்பணி சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது என்றும், விண்வெளி வீரர்கள் ரஷ்யாவால் பயிற்சியளிக்கப்படுகிறார்கள் மற்றும் முக்கியமான மருத்துவ தொழில்நுட்பங்கள் பிரான்சால் வழங்கப்படுகின்றன எனவும் கூறினார்.
இருப்பினும், கோவிட் -19 காரணமாக ககன்யான் திட்டம் சிறிது தாமதாகலாம் என்று அவர் கூறினார். "நாங்கள் ஆரம்பத்தில் ஆகஸ்ட் 2022-ல் விண்வெளிக்கு இலக்காகக் கொண்டிருந்தோம், இலக்கு வைப்பதில் ஒரு சிறிய மாற்றம் உள்ளது. திட்டம் தொடர்பாக பிற நாடுகளின் உதவியை பெற முயற்சிக்கிறோம்”என்று அவர் கூறினார்.
2018 ஆம் ஆண்டில் தனது சுதந்திர தின உரையில், பிரதமர் நரேந்திர மோடி 2022 ஆம் ஆண்டில் நாடு தனது 75 வது சுதந்திர ஆண்டைக் கொண்டாடும் போது, ககன்யான் மனித விண்வெளிப் பயணத்தின் ஒரு பகுதியாக ஒரு இந்திய மகன் அல்லது மகள் விண்வெளியில் இருப்பார் என கூறினார். இது இந்தியாவின் லட்சிய திட்டமான மற்றும் சவாலான பணி.
இந்த ஆண்டு ஏவப்பட இருக்கும் ராக்கெட் ஏவுதல்கள் குறித்து கேட்டபோது, டாக்டர் சிவன், நவம்பர் மாதத்தில் பி.எஸ்.எல்.வி ராக்கெட்டை ஏவுவதற்கு திட்டமிட்டுள்ளது என்றார். கோவிட் -19 லாக்டவுன் காரணமாக, பல பயணக் கட்டுப்பாடுகளைக் கொண்ட வரப்பட்டதால் திட்டங்கள் சிறிது தாமதாகலாம் என்றார்.