தலைநகர் டெல்லியில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது குற்றச் சம்பவங்கள் பெருமளவு அதிகரித்துள்ளதாகத் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இந்தியாவின் தலைநகரமாகத் திகழும் டெல்லிக்கு எப்போதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். டெல்லி, இந்தியாவின் மைய பகுதியில் மட்டும் இருப்பதால் அல்ல, இந்தியாவின் ஒட்டு மொத்த அரசியல் தலை எழுத்தையே எழுதும் மனிதர்கள் ஆட்சி செய்யும் இடமாக இருப்பதாலும், இந்திய மக்களின் ஒட்டுமொத்த தலை எழுத்தையே எழுதும் மையப் பகுதியாக இருப்பதாலும் தான், டெல்லிக்கு இந்த மவுசு எப்போதும் உண்டு. ஆனால், தற்போது டெல்லி குற்றங்களின் தலைநகரமா மாறி வருவது கடும் அதிர்ச்சியை மட்டுமல்ல, கடும் வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் உட்பட பல விதமான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து உள்ளதாகக் கடந்த மே மாதம் தொடர்ச்சியாகச் செய்திகள் வெளிவந்துகொண்டு இருந்தன. அதன் தொடர்ச்சியாகத் தான், தற்போது நாட்டின் தலைநகரில் பலவிதமான குற்றச் சம்பவங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகின்றன.

இந்தியாவின் தலை நகர் டெல்லியில் கொலை, திருட்டுச் சம்பவங்கள் என பல விதமான குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை இந்தாண்டு பல மடங்கு அதிகரித்திருப்பது, அந்த மாநில காவல் துறையினரை கடும் அதிர்ச்சியடையச் செய்து உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் கீழ் சுமார் 300 முதல் 400 விழுக்காடு வரையிலான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

கடந்த 2011 - 12 ஆம் ஆண்டை விட, முந்தைய ஆண்டுகளை ஒப்பிடும் போது இந்த வன்முறைக் குற்றங்கள் ஓரளவு குறைந்து காணப்படுகின்றன. ஆனால், நிர்பயா பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்குப் பிறகு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அங்க அதிகரித்துக் காணப்படுவதால், காவல் துறையின் செயல்பாடுகளானது, பொது மக்கள் மத்தியில் மிகப் பெரிய கேள்விக்குறியாகி இருக்கிறது.

பாலியல் வன்கொடுமை, கொலைச் சம்பவங்கள் போன்ற பல கொடூரச் சம்பவங்கள் அதிக அளவிலேயே தலைநகர் டெல்லியில் தற்போது நடந்து வருகின்றன.

இது குறித்து தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டிருக்கும் புதிய தரவுகளின் அடிப்படையில், “பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கையில் டெல்லி முதலிடத்தில்” உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

“பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் போது கடந்த 2014 - 2019 ஆண்டுக் கால கட்டத்தில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் பதிவாகி” இருக்கின்றன.

“இந்தக் குற்ற வழக்குகளில் அதிகப்படியாக வாகன திருட்டு, வழிப்பறி, வீடு புகுந்து திருட்டு உள்ளிட்ட சம்பவங்களே பதிவாகி இருக்கின்றன.

ஆனால், இது போன்ற குற்றச் சம்பவங்கள், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தை ஒப்பிடும் போது, 65 விழுக்காடு அதிகம்” ஆகும்.

அதே போல், “பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 440 விழுக்காடு அதிகரித்து உள்ளது என்றும் அதிர்ச்சி தகவல்கள், அந்த பட்டியலில் இடம் பெற்று” உள்ளன.

மேலும், “இந்தியாவின் மற்ற மாநிலங்களில் காவல் துறை மாநில அரசின் கீழ் இருந்தாலும் டெல்லி காவல் துறை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித், தற்போதைய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் டெல்லி காவல் துறை மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரவேண்டும் என மத்திய அரசிடம் பல முறை வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், தற்போது வரை அந்தக் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்கவில்லை” என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, டெல்லியில் கொரோனா பாதிப்பு, காற்று மாசுபாடு மற்றும் குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பு ஆகியவை பற்றி ஆலோசனை நடத்துவதற்காக, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், அடுத்த வாரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்துப் பேச உள்ளார் என்றும், தகவல்கள் வெளியாகி உள்ளன.