நாடு முழுவதும் பெண் கடத்தல் சம்பங்கள் அதிகரித்து, பாலியல் வர்த்தகச் சந்தைகளில் விற்கப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

உலகமே தற்போது கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதனால், உலக அளவில் மிகப் பெரிய இழப்புகள் ஏற்பட்டு, பலரும் வேலை இழந்து தவித்து வருகின்றனர். பலரும், தற்போது உயிர் பிழைத்தால் போதும், வேலையைப் பற்றி பிறகு யோசிக்கலாம் என்ற மன நிலைக்கு வந்து விட்டனர்.

இப்படிப்பட்ட சூழல் நிலையில், நாடு முழுவதும் பெண்கள் கடத்தப்படும் சம்பங்கள் அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

இது தொடர்பாகப் பேசிய சக்தி பஹினி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ரிஷி காந்த், “ ஐ.நா சபையின் அறிக்கையைச் சுட்டிக்காட்டி, கோவிட் 19 அச்சுறுத்தல் என்பது, எல்லை தாண்டிய பயணங்களை, மனித கடத்தல்களை அதிகரிக்க ஒரு வகையில் வழி வகுத்துள்ளதாக” குறிப்பிட்டுள்ளார்.

“உலகின் பல நாடுகளில் சமச்சீரற்ற வாழ்வாதார சூழ் நிலையைச் சீர் செய்யும் விதமாக, மனித இடப்பெயர்வுகள் அதிகரித்து வருவதாகவும்” சுட்டிக்காட்டி உள்ளார்.

“கொரோனா வைரசால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக மற்ற உலக நாடுகளைப் போலவே, இந்தியாவில் பலரும் வேலை இழந்துள்ளனர். இதையே, ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தும் சமூக விரோத கும்பல்கள் பணம் மற்றும் வேலைவாய்ப்பு என இன்னம் பிற வசதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, ஏழை எளிய மக்களிடம் ஆசை வார்த்தைகளை வாக்குறுதிகளாகத் தந்து, அவர்களைக் கவர்ந்து இழுக்கின்றனர்” என்று கூறியுள்ளார்.

“இந்த மோசடி கும்பலின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறுபவர்களை அதிலும் குறிப்பாக ஏமாறும் பெண்களை பாலியல் வர்த்தகச் சந்தைகளில் விற்பனை செய்கின்றனர்” என்றும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டி உள்ளார்.

“பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளைச் சந்தை வர்த்தகத்தில் கட்டாயப்படுத்தித் தள்ளி விடுகின்றனர் என்றும், உயிர் பயத்தால் சிலர் வேறு வழியின்றி மிரட்டல் காரணமாக அந்த வேலையை செய்யத் தொடங்கி உள்ளனர்” என்றும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, “அஸ்ஸாம், ஒடிசா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த சமூக விரோத கும்பல்களே, இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்” என்றும் அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டி உள்ளார்.

“இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து வந்த இயற்கை பேரிடர்களைக் கண்ட ஒடிசா, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இந்த கடத்தல்கள் மிகவும் மோசமான நிலையை எட்டி உள்ளது” என்றும், அவர் கவலைத் தெரிவித்துள்ளார்.

“மேற்கு வங்கத்தில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 138 குழந்தை திருமண வழக்குகள் நடைபெற்று, மேற்கு வங்க மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த பெண் குழந்தைகளில் பலர் அந்த மாநிலத்தை விட்டு வெளியே அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்” என்றும், அவர் வேதனை தெரிவித்தார்.

“அப்படி அழைத்துச் செல்லப்பட்ட அனைவரும், பாலியல் வர்த்தகச் சந்தைகளில் விற்கப்பட்டு இருக்கலாம்” என்றும், ரிஷி காந்த் மேலும் பீதியைக் கிளப்பினார்.

“ பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் காணாமல் போன வழக்குகள் ஆயிரக்கணக்கில் தற்போது உள்ளன என்றும், அவர்கள் அனைவரும் சந்தை வர்த்தகத்திற்குத் தள்ளப்பட்டிருக்கலாம்” என்று, சந்தேகப்படுவதாகவும், அவர் தெரிவித்தார்.

“நாட்டில் வேலை வாய்ப்பு இல்லாத இந்த சூழலில், தங்களது வாழ்வாதாரத்தை இழந்து சொந்த மாநிலங்களுக்குத் திரும்பும் குடிபெயர்ந்த தொழிலாளர்களில் பலர் இத்தகைய கொடூரங்களைச் செய்யும் சமூக விரோத கும்பல்களின் கைகளில் சிக்க அதிக அளவிலான வாய்ப்பு உள்ளது என்றும், சில நேரங்களில், உள்ளூர் கும்பல்களிடம் மட்டுமல்லாமல், சர்வதேச கடத்தல்காரர்களின் வசமும் அவர்கள் சிக்கலாம்” என்றும், அவர் கூறியுள்ளார்.

மேலும், “கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் சட்ட அமலாக்க அமைப்புகளால் கைது செய்யப்பட்ட வங்கதேசத்தைச் சேர்ந்த கடத்தல்காரன் அசாம் கான், தனது உதவியாளர்களால் நடத்தப்படும் 3 பெரிய பாலியல் சந்தைகளில் ஆதரவற்ற பெண்கள் இருப்பதாக ஒப்புக்கொண்டதையும்” அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

“கடத்தல்காரன் அசாம் கானிடம் நடத்தப்படும் விசாரணையில், பெண்கள் கடத்தப்படுவது தொடர்பான பல முக்கிய விவரங்கள் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், “பாலியல் தொழில் செய்யும் பல விடுதிகளுக்காக எல்லை தாண்டிய மனித கடத்தலில் ஈடுபட்ட ஐதராபாத்தைச் சேர்ந்த வங்கதேச தம்பதியரை 'அப்துல் சலாம் - சிவூலி கட்டூன்' ஆகியோர், மே மாதம் என்.ஐ.ஏ. கைது செய்ததையும் குறிப்பிட்டுள்ளார்.

“நாடு முழுவதும் அதிகரித்துவரும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் கடத்தல்கள் குறித்து முறையாக ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும், அவற்றைத் தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ. விசாரணை செய்ய வேண்டும் என்றும், அவர் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

அதே போல், “கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் முதல் 2019 ஆம் ஆண்டு வரை வரை இந்தியாவில் 38,503 கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தேசிய குற்றப் பதிவு பணிக்கத்தின் என்.சி.ஆர்.பி கூறியுள்ளதையும், அவர் மேற்கோள் காட்டி உள்ளார்.

இதனையடுத்து, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் கடத்தல்கள் தொடர்பாக விழிப்புணர்வுடன் இருக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது சுற்றறிக்கை ஒன்றையும் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.