இந்தியாவில் வரும் 2050 க்குள் 30 நகரங்களில் தண்ணீர் பற்றாக்குறை உருவாகும் என்று, ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

உலகம் முழுவதும் சுற்றுச் சூழல் கடுமையாக மாசடைந்து காணப்படுவதாக ஐ.நா. சபை வரை, இடியாய் முழங்கப்பட்டு வருகிறது. தொழிற்சாலைகள், வாகன போக்குவரத்துக்களால் ஏற்படும் மாசு ஒரு பக்கம் என்றால், இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பதால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்பும், அதனால் ஏற்படும் மாசும் இன்னொரு பக்கம் அரங்கேறிக்கொண்டு இருக்கிறது. இத்தகைய செயல்பாடுகள் யாவும் அழிவுக்கான தொடக்கம் என்ற உண்மையும், இங்கு யாரும் அறியாமல் இல்லை. இது போன்ற பேராபத்துக்களுக்கு ஒரு நாள் நிச்சயம் பல ஆயிரம் மனித உயிர்களைப் பழி கொடுக்க நேரிடும் என்ற பேருண்மையும், இந்த உலகில் உள்ள அனைத்து தலைவர்களும் அறிந்த ஒரு விடையாக தெரிந்துகொண்டு, அத்தகைய நாட்களுக்காக நாம் காத்துக்கொண்டு இருக்க இப்போதே நாம் தயாராகி விட்டோம் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

இப்படியான பாதிப்பு உலக நாடுகளுக்கு பொருந்தும் என்றாலும், இந்தியாவில் அதிகம் எதிரொலிக்கும் என்பதும் மறுக்க முடியாத ஒரு உண்மையாக இருக்கிறது.

உலக வனவிலங்கு நிதியம் என்று அழைக்கப்படும் டபிள்யு டபிள்யு எஃப் அமைப்பு ஒன்று சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வில், “வரும் 2050 க்குள் இந்தியாவில் அமைந்துள்ள சுமார் 30 நகரங்கள் மிக கடுமையான தண்ணீர் பற்றக்குறை ஏற்படும் அபாயங்களை சந்திக்க நேரிடும்” என்று, கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

அதாவது, “அடுத்து வரும் 30 ஆண்டுகளில் 100 நகரங்களில் மிகப் பெரிய நீர் அபாயங்களைச் சந்திக்கக்கூடும் என்ற உலக வனவிலங்கு நிதியம், நீர் இடர் வடிகட்டி ஆய்வு” கூறியுள்ளது. “இந்த தண்ணீர் பற்றாக்குறை அபாயங்களுக்கு உள்ளாகக் கூடிய நகரங்களின் பட்டியலில் இந்தியாவில் இருக்க கூடிய சுமார் 30 நகரங்களும் இந்த பட்டியலில் இடம் பெற்று” உள்ளன.

அதன் படி “டெல்லி, மும்பை, புனே, ஸ்ரீநகர், கொல்கத்தா, ஜெய்ப்பூர், இந்தூர், அமிர்தசரஸ், பெங்களூரு, கோழிக்கோடு, விசாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகள் இந்த பட்டியலில் இடம் பெற்று” உள்ளன.

மேலும், “நகர்ப்புற திட்ட மிடல் மற்றும் ஈர நில பாதுகாப்பு ஆகியவை இந்தியாவில் நன்னீர் அமைப்புகள் அப்படியே இருப்பதை உறுதி செய்ய எடுக்கக்கூடிய சில நடவடிக்கைகள்” பற்றி, அந்த ஆய்வில் கூறப்பட்டு உள்ளது.

அதன்படி, “தண்ணீரைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய நிலையில், நீர் பயன்பாட்டைக் குறைப்பதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டிய மற்றொரு அம்சம்” என்றும், வலியுறுத்தப்பட்டு உள்ளது.

“கடந்த சில ஆண்டுகளில், நாட்டின் பல நகரங்கள் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு, கடும் நெருக்கடியில் போராடி வருவதாக லைவ் மிண்ட் தெரிவித்து உள்ளது.

குறிப்பாக, “மஹாராஷ்டிரா மாநிலம் முதல் தமிழ் நாடு வரை நிலத்தடி நீர் குறைந்து உள்ளதும்” அதில் சுட்டிக்காட்டப் பட்டு உள்ளது.

அதே போல், “உள்கட்டமைப்பு இல்லாமை மற்றும் கால நிலை மாற்றம் காரணமாக மாநிலங்கள் தங்கள் தண்ணீர் தேவைகளைப் பூர்த்தி செய்யச் சிரமப்பட்டு வருகின்றன” என்றும், அதில் மேற்கொள் காட்டப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக, உலக வனவிலங்கு நிதிய இந்தியாவின் திட்ட இயக்குநர் செஜல் வோரா கூறும்போது, “நகர்ப்புற நீர் நிலைகள் மற்றும் ஈர நிலங்களை மீட்டு எடுப்பது போன்றவையே, இந்த பிரச்சனைகளுக்குத் தீர்வுகள் வழங்கக்கூடும்” என்று, குறிப்பிட்டு உள்ளார்.

அத்துடன், “நகரங்களின் எதிர் காலம் என்னவாக இருக்கும் என்பதை மீண்டும் உருவாக்கி, அது பற்றி ஒரு கற்பனை செய்ய இது எங்களுக்கு ஒரு நல் வாய்ப்பாக அமைந்து உள்ளது” என்றும், அவர் கூறியுள்ளார்.