ஜார்க்கண்டில் ரோப் கார். விபத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டரில் மீட்கும்போது ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாபா பைத்யநாத் கோயிலுக்குச் செல்ல திரிகுட் மலையில், ரோப் கார் வசதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரோப்கார்கள் ஒன்றோடொன்று மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 48 பேர் அங்குள்ள ரோப் கார்களில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 44 மணி நேரம் நீட்டித்த மீட்புப் போராட்டத்தில் அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்பு நடந்த விபத்தில் சிக்கியவர்களை இந்திய விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, இந்திய ராணுவம் மற்றும் இந்தோ திபெத் எல்லை போலீஸ் மற்றும் அவர்களுடன் சேர்ந்து உள்ளூர் கிராம மக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். கடும் செங்குத்தான மலை பகுதியில் ரோப் கார் இருந்ததால் மீட்பு பணி கடும் சவாலாக அமைந்தது. நேற்று இரண்டு எம்ஐ-17 ஹெலிகாப்டர்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன. ஹெலிகாப்டர் உதவியுடனே ரோப் கார்களில் சிக்கியிருந்தவர்களுக்கு உணவு தண்ணீர் போன்றவை வழங்கப்பட்டன.

அதனைத்தொடர்ந்து மேலும் மீட்பு பணி பாதிக்கும் வகையில் போதிய சூரிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் நேற்று மாலை, தற்காலிகமாக மீட்பு பணி நிறுத்தப்பட்டு, பின்னர் இன்று காலை மீண்டும் தொடங்கப்பட்டது. நேற்றைய தினம் மீட்புப் பணியின்போது, ஒருவரை ஹெலிக்காப்டர் உதவியுடன் பத்திரமாக மீட்டு கொண்டு வந்த போது பாதுகாப்பு பெல்ட் உடைந்ததில் அவர் 1200 அடி பளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து இன்றும் மீட்பு பணியின்போதே தவறி விழுந்து மற்றொருவரும் உயிரிழந்தார். இதுவரை மொத்தமாக 3 பேர் உயிரிழந்ததாகவே கூறப்படுகிறது. காயமடைந்த அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.