சாத்தான்குளம் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜின் நாம் யாரும் இறப்பை மறந்திருக்க மாட்டோம். ஊரடங்கு விதிமுறைகளை மீறி தந்தையும் மகனும் தங்களின் கடையைத் திறந்து வைத்திருந்த காரணத்துக்காக, அப்பகுதி காவலர்கள் அவர்களைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று கொடூரமாகத் தாக்கியிருந்தனர். பலத்த காயமடைந்த அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்காமல் சிறையில் அடைத்ததால், இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இந்த நிகழ்வையொட்டி, இந்தியா முழுவதுமிருந்து சாத்தான்குளம் காவலர்கள் மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. ஊரடங்கு விதிமீறலுக்குத் தண்டனை மரணம்தானா என்றும், காவல்துறையில் பணிபுரிபவர்கள் ஏன் இவ்வளவு அதிகாரத்திமிறுடன் நடந்து கொள்கிறார்கள் என்றும் மக்கள் கேள்வி எழுப்பத்தொடங்கினர்.
காவலர்கள், பொதுமக்களிடம் எப்படியெல்லாம் நடந்து கொள்ளக்கூடாது என்பதற்கு உதாரணமாக சாத்தான்குளம் காவலர்கள் இருந்தனர் என்றே சொல்லவேண்டும். பொது மக்கள் பலரும், காவல்துறை மீதிருந்த நம்பிக்கையை இழந்து வரும் இந்த நேரத்தில், குஜராத்தில் உள்ள சூரத் நகரில் பெண் கான்ஸ்டபிள் சுனிதா யாதவ் காவலர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாய் இருக்கிறார்.
இவர் கடந்த புதன்கிழமை இரவு சூரத்தின் மங்கத் சௌக் பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்திருக்கிறார். அப்போது அம்மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நடைமுறைகளை மீறி ஐந்து பேர் கொண்ட கும்பல் அவ்வழியாக வந்திருக்கிறார்கள். கொரோனா தடுப்புக்கான மாஸ்க் கூட அணியாமல், இவர்கள் அனைவரும் தங்களது காரில் வந்துள்ளனர். சுனிதா அவர்களைத் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளார். அப்போது அவர்கள் தன் நண்பரும் குஜராத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் குமார் கனானியின் மகனான பிரகாஷ் கனானிக்கு போன் செய்து சம்பவத்தை விளக்கியுள்ளனர்
அடுத்த சில மணி நேரத்தில் அமைச்சர் குமார் கனானியின் காரில், சுனிதா இருந்த இடத்துக்கு வந்த அமைச்சர் மகன் பிரகாஷ், தடாலடியாக சுனிதாவிடம் தன் நண்பர்களை விடுவிக்கும்படி கேட்டுள்ளார், ஆனால், சுனிதா அவர்களை விடுவிக்க உறுதியாக மறுத்துவிட்டார். இதனால், சுனிதாவுக்கும் பிரகாஷ் தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படத் தொடங்கியிருக்கிறது.
`ஊரடங்கு நேரத்தில் வீட்டைவிட்டு வெளியேற உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. இந்தச் சமயத்தில் இந்தியப் பிரதமரே வந்தாலும் தடுத்து நிறுத்துவேன்’ என சுனிதா கூறியுள்ளார்.
அதற்கு அமைச்சரின் மகன், அதிகாரத்திமிறுடன் `உங்களை (சுனிதா) 365 நாள்களும் இதே இடத்தில் நிற்க வைப்பேன்’ என்று கூறியிருக்கிறார். சற்றும் தயங்காத சுனிதா, `நான் உங்கள் வீட்டுப் பணியாளோ, அடிமையோ இல்லை’ என பதில் அளித்திருக்கிறார்.
இந்தப் பிரச்னைகளைத் தொடர்ந்து, சுனிதா, தன்னுடைய உயர் அதிகாரிக்கும் போன் செய்து விஷயத்தைத் தெரிவித்துள்ளார். அந்த உயர் அதிகாரி, பிரகாஷ் தரப்பை ஏதும் சொல்லாமல், சுனிதாவை உடனடியாக சம்பவ இடத்திலிருந்து வெளியேறுமாறு கூறி, அவருக்கு உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. சுனிதாவும், அங்கிருந்து வெளியேறியிருக்கிறார். இன்னொரு பக்கம், அமைச்சரின் மகன், நண்பர்கள் அனைவரும், ஊரடங்கை மீறியதாகக் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும், வாக்குவாத நேரத்தில் சம்பவ இடத்தில் இருந்தவர்கள் அதை தங்களின் மொபைலில் பதிவிட்டிருந்திருக்கிறார்கள். தொடர்ந்து, அதை இணையத்திலும் வெளியிட்டிருக்கிறார்கள். அமைச்சரின் மகனும், காவலர் சுனிதாவும் பேசிக்கொள்ளும் அந்த வீடியோ, இணையத்தில் மிகவும் வைரலாகிவிட்டது.
சுனிதாவுக்கு பாராட்டும், ஆதரவும் ஒட்டுமொத்தமாகக் குவியத்தொடங்கிவிட்டது. இன்னொரு பக்கம், அமைச்சரின் மகனுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நெட்டிசன்கள் சமூகவலைத்தளத்தில் கருத்து பதிவிடத் தொடங்கிவிட்டனர். இதையடுத்து விவகாரம் பெரியதாகத் தொடங்கிவிட்டது.
இதைச் சற்றும் எதிர்பார்க்காத அதிகார வர்க்கம், காவலர் சுனிதாவை போலீஸ் தலைமை அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதுபற்றி அங்கிருந்த பத்திரிகைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரித்துள்ளது. அதற்கு, `சுனிதா யாதவ் மருத்துவ விடுமுறையில் உள்ளார், இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும்’ என சூரத் போலீஸ் கமிஷனர் ஆர்.பி பிரம்பத் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும், `கேள்வி கேட்கும் அதிகாரிகளை இப்படி இடமாற்றம் செய்வது என்பது, இரு வரும் காலத்தில் இது போன்ற தைரியமான அதிகாரிகளைக் கேள்வி கேட்காதீர்கள் எனச் சொல்வதற்குச் சமம்' எனக்கூறி கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இதொரு பக்கம் இருக்க, இந்த பிரச்னைக்குப் பிறகு எழுந்த அழுத்தத்தால் காவலர் சுனிதா யாதவ், தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது உண்மையாக இருக்குமோ என்று நினைத்து பலரும் வேதனை தெரிவித்து வருகிறார்கள்.
தன் மகனின் செயல் தொடர்பாக விளக்கமளித்துள்ள அமைச்சர் குமார் கனானி, ``என் மகன் அவரின் மாமனாருக்கு கொரோனா சிகிச்சையளிக்க என் காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது வழி மறித்த பெண் காவலர் சுனிதா, `வண்டியில் ஏன் எம்.எல்.ஏ ஸ்டிக்கர் ஒட்டியுள்ளது? நீங்கள் ஏன் இந்தக் காரில் வந்தீர்கள்?' என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருக்கிறார். என் மகன் அதற்கு விளக்கம் கூறிய போதும், அந்த காவலர் புரிந்துகொள்ளவில்லை என நினைக்கிறேன். இந்த புரிதலின்மைதான், அவர்களை விவாதத்துக்கு உட்படுத்தியிருக்கிறது” எனக் கூறியிருக்கிறார். இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் இந்திய அளவில் சர்ச்சையாகியுள்ளது.
- பெ. மதலை ஆரோன்