ஹிஜாப் விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது விசாரணை கர்நாடக ஐகோர்ட்டில் இன்று மீண்டும் நடக்கிறது.
கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப்,பர்தா, புர்கா அணிந்து வருவதற்கு இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதால், 6 முஸ்லிம் மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மங்களூரு, குந்தாப்பூர், ஷிமோகா, பத்ராவதி, சிக்மகளூரு உள்ளிட்ட இடங்களிலும் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் கல்லூரிக்கு வெளியே நிறுத்தப்பட்டனர். இதனால் அங்கும் மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைக் கண்டித்து ஏபிவிபி மாணவ அமைப்பினர் காவி துண்டு அணிந்து 'ஜெய் ஸ்ரீராம்' என முழக்கம் எழுப்பினர். இதனைக் கண்டித்து பாபா சாகேப் அம்பேத்கர் மாணவர் அமைப்பினர் நீல துண்டு அணிந்து 'ஜெய் பீம்' என முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து கர்நாடகாவில் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக முஸ்லிம் மாணவிகள் 18 பேர் சார்பில் மனுக்கள் கர்நாடக ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில் அந்த மாணவிகள், ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வர தங்களை அனுமதிக்கும்படி அரசுக்கு உத்தரவிடக்கோரி கோரியுள்ளனர். இந்த மனுக்கள் கர்நாடக ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய அந்த அமர்வு, கடந்த 10-ம் தேதி இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. அதில் அனைத்து மாணவர்களும் மத அடையாள ஆடைகளை அணிந்து வர தடை விதித்து உத்தரவிட்டனர். கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகளை உடனே திறக்க வேண்டும் என்றும், இறுதி தீர்ப்பு வரும் வரை அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
அதனைத்தொடர்ந்து இந்த மனுக்கள் மீது தொடர்ந்து விசாரணை நடத்தி விரைவாக தீர்ப்பு வழங்குவதாக தலைமை நீதிபதி உறுதி அளித்தார். அதைத் தொடர்ந்த இந்த மனுக்கள் மீதான விசாரணை 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் ஹிஜாப் விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது கர்நாடக ஐகோர்ட்டில் இன்று விசாரணை நடைபெறுகிறது. பகல் 2.30 மணி அளவில் இந்த மனுக்கள் மீது விசாரணை நடைபெற உள்ளது. இன்று அட்வகேட் ஜெனரல் பிரபுலிங்க நாவதகி அரசு தரப்பு வாதத்தை எடுத்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.