சாமியார் நித்தியானந்தாவின் உடல் நிலை பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதனால் அவர் சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வர வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளாகவே, சர்ச்சைக்குரிய வகையில் நித்தியானந்தாவின் பெயர் அதிகம் உச்சரிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் கொரோனா அலைகள் தொடர்ந்து 3 அலைகளாக வீசிய நிலையில், அரசியல் மாற்றங்களும் இங்கு நிகழ்ந்து, ஆட்சி மாற்றமும் நிகழ்ந்து உள்ளது. இப்படி, வேறு வேறு காரணங்களால் நித்தியானந்தாவின் பெயரை தமிழக மக்கள் சற்று மறந்திருந்தனர்.

அதாவது, நித்தியானந்தாவை சுற்றியும், அவரது ஆசிரமத்திலும் சட்ட விரோதமாகவும் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுவதும், பின்பு மறைவதும் தொடர்ந்து நடந்து வருகின்றன.

எனினும், உலகின் ஏதோ ஒரு இடத்தில் “கைலாசா” என்று, தானே ஒரு பெயரை சூட்டி, தனி நாடு ஒன்றை ஒருவாக்கி, அங்கு நித்யானந்தா தலைமறைவாக இருந்தபடி, இணையதளங்களில் அவ்வப்போது உலா வருவதுடன், பக்தர்களுக்கு அருள் வழங்குவதாக போதனைகளையும் போதித்து வருகிறார்.

இந்த நிலையில் தான், “நித்தியானந்தா எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்” என்று, ஒரு வெளிநாட்டு பெண் சிஷ்யை ஒருவர், கடந்த மார்ச் மாதம் கூட புகார் அளித்திருக்கிறார். அதுவும், கர்நாடகாவின் பிடதி போலீசாரிடம் இந்த புகாரை, அந்த பெண் பக்தை அளித்திருக்கிறார்.

அந்த வெளிநாட்டு பெண் அளித்துள்ள அந்த பாலியல் புகாரில், “கைலாசா என்ற நாட்டில், நித்தியானந்தாவும் அவரது சீடர்களும் அங்குள்ள பெண்களை அடித்து துன்புறுத்தி பாலியல் தொந்தரவு அளித்து வருகின்றனர்” என்று, பகிரங்கமாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

மேலும், “நித்யானந்தாவின் கைலாசா ஆசிரமம், பெண் குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்வதாகவும்” வெளிநாட்டு பெண் சாரா லேண்ட்ரி, பகிரங்கமாகவே குற்றம்சாட்டி உள்ளார்.

அதன் தொடர்ச்சியாக கொரோனா காலத்திற்கு பிறகு, “முறையான இந்திய உணவுகள் கிடைக்காமலும், இந்திய உணவுப் பொருட்கள் கிடைக்காமல் போனதாலும், போதிய மருத்துவ வசதிகள் இல்லாததாலும், கைலாசாவில் பஞ்சம் தலை விரித்தாடுவதாக சமீபத்தில் அங்கிருந்து தப்பித்துவந்த ஒரு சீடர் கூறியிருந்தார்.

இதனை உண்மையாக்கும் விதமாக, எப்போதும் பிரிஷ்காக போட்டோக்கு போஷ் கொடுக்கும் சாமியார் நித்தியானந்தா, உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பது போல் தனது படுக்கையில் உடல் சோர்வுற்ற நிலையில், இருப்பது போன்று புகைப்படுமும் வெளியாகி பெரும் பரபரப்பை பற்ற வைத்தது.

அந்த போட்டோவில், “கண்கள் சொறுகி, தனது உடல் எடை குறைந்து மிகவுமு் மெலிந்த தேகத்திடன் படுக்கையில்” நித்தி படுத்திருக்கிறார்.

மேலும், “நான் திரும்ப வருவேனு சொல்லு” என்று, தன் கைபட எழுதி கையெழுத்தை போட்டு உள்ளார்.

குறிப்பாக, தனது கையெழுத்தில் கூட எழுத்துப்பிழை ஏற்படும் அளவிற்கு, தன் பெயரை தவறாக எழுதி அதை அடித்து திருத்தி எழுதியிருக்கிறார்.

இப்படியாக, இந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள “நித்தியானந்தா சிகிச்சைக்காக இந்தியா வருவாரா?” என்கிற கேள்வியும் தற்போது எழுந்து உள்ளது.

இந்த சூழ்நிலையில் தான், தனது உடல் நிலை குறித்து விளக்கம் அளித்துள்ள நித்தியானந்தா, இது தொடர்பாக, தற்போது புதிய விளக்கம் அளித்திருக்கிறார்.

அவர் அளித்துள்ள விளக்கத்தில், “27 மருத்துவர்கள் எனக்கு சிகிச்சை அளிக்கிறார்கள் என்றும், மருத்துவ சிகிச்சையிலிருந்து நான் இன்னும் வெளியே வரவில்லை என்றும். பிரபஞ்சத்தின் சக்தியை என் உடல் எப்படி உள்வாங்கி செயல்படுகிறது என்பதை எனக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் ஆய்வு செய்கிறார்கள்” என்றும், குறிப்பிட்டிருக்கிறார்.

“தினந்தோறும் நடைபெறும் நித்ய பூஜை மட்டும் இன்னும் நிற்கவில்லை என்றும், வேறு எந்த வேலையையும் நான் செய்வதில்லை என்றும், உணவு உண்ண முடியவில்லை, தூங்க முடியவில்லை” என்றும், அதில் கூறப்பட்டு உள்ளது.

“என் உடம்புக்கு என்னானது என்றே எனக்குத் தெரியவில்லை என்றும். மருத்துவர்களாலும் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், எனக்கு அறிமுகமானவர்களைக் கூட அடையாளம் கண்டுக் கொள்வதில் சிரமப்படுகிறேன்” என்றும், அவர் கூறியிருக்கிறார்.

குறிப்பாக, “நான் சாகவில்லை. ஆனால், சமாதி மனநிலையை அடைந்திருக்கிறேன். விரைவிலேயே பரிபூரண நலம் பெற்று திரும்புவேன்” என்றும், நித்தி அந்த கடித்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

இப்படியான விளக்கம் அளித்த கையோடு தான், இன்று மே 11 ஆம் தேதி என்று, அந்த தேதியையும் குறிப்பிட்டு, “திரும்ப வந்துட்டேன்னு சொல்லு” என்று, தான் எழுதிய குறிப்பையும் நித்தியானந்தா, வெளியிட்டிருக்கிறார்.

இதனிடையே, நித்தியானந்தா விளக்கம் அளித்து வெளியிட்டிருக்கும் இந்த கடிதமும், இணையத்தில் தற்போது பெரும் வைரலாகி வருகிறது.