இளம் பெண்ணுக்கு செல்போனில் ஆபாச படங்கள் அனுப்பியதாக 14 போலீசார் மீது புகார் அளிக்கப்பட்டு உள்ள நிலையில், காவல் உதவி ஆய்வாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் பஸ்தி மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்து உள்ளார்.
அப்போது, அந்த பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, பொது மக்கள் முகக்கவசம் அணிந்துள்ளார்களா? என்று, போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அந்த தருணத்தில், அங்கிருந்த காவல் உதவி ஆய்வாளர் தீபக் சிங் என்பவர், அந்த பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு அறிமுகம் ஆகி உள்ளார். இளம் பெண் சற்று அழகாக இருந்ததால், அவரது வசீகரத்தால் ஈர்க்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் தீபக் சிங், அந்த இளம் பெண்ணிடம் தொலைப்பேசி எண்ணை கேட்டு வாங்கி உள்ளார்.
இதனையடுத்து, அந்த இளம் பெண்ணுக்கு அவர் தொடர்ந்து மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்து வந்தார். ஒரு கட்டத்திற்கு மேல், அந்த இளம் பெண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்திகள் மற்றும் படங்களை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண், பொறுத்துப் பொறுத்து பார்த்து உள்ளார். ஆனால், அந்த போலீசாரின் மன்மத லீசை ஒரு கட்டத்திற்கு மேல் எல்லை மீறி போய் உள்ளது.
குறிப்பாக, மேலும் 14 போலீசார் அவரிடம் அடிக்கடி பேசி தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், இன்னும் பயந்து போன அந்த இளம் பெண், அந்த பகுதியில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் நேரில் சென்று புகார் அளித்து உள்ளார்.
அந்த புகாரில், “கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பொது மக்கள் முகக்கவசம் அணிந்துள்ளார்களா? என்று, போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த காவல் உதவி ஆய்வாளர் தீபக் சிங் எனக்கு அறிமுகமானார். அவர் என்னிடம் செல்போன் எண் கேட்டு பெற்றுக்கொண்டார்.
அவர், போலீசார் என்பதால் நானும் அவரை நம்பி எனது செல்போன் எண்ணை அவருக்கு கொடுத்தேன். ஆனால், நாளாக நாளாக எனது செல்போன் எண்ணுக்கு அவர் ஆபாச குறுஞ்செய்திகள், படங்களைப் பகிர்ந்து வந்தார். ஆனாலும், நான் அவரை எச்சரித்தேன். எனினும். அவர் தொடர்ந்து எனக்குத் தொல்லை கொடுத்து வருகிறார்” என்று, அந்த புகார் மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் தீபக் சிங் மற்றும் காவலர் ஒருவர் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு உள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
முக்கியமாக, இந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள மேலும் 14 காவலர்கள் மீது தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது. இதனால், அப்பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.