டெல்லியில் தீவிரம் அடையும் விவசாயிகள் போராட்டம் காரணமாக, இது வரை அமைதி காத்து வந்த சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே, மத்திய அரசை கடுமையாக விமர்சித்து தனது மெளனத்தை கலைத்து உள்ளார்.
விவசாயிகள் நலனை காக்கும் என்ற எண்ணத்தில் மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த புதிய வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் அரியானா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட 6 மாநில விவசாயிகள் டெல்லி சலோ போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றுடன், அந்த போராட்டம் 6 வது நாளை எட்டி உள்ளது. இதனால், கடந்த ஒரு வார காலமாக, டெல்லி முற்றிலுமாக ஸ்தம்பித்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது டெல்லி போலீசார் தண்ணீரைப் பீச்சி அடித்தும், புகை குண்டுகளை வீசியும் போராட்டத்தை கலைக்க முயன்றனர். இதனால், விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே கடுமையான தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவம், நாடு முழுவதும் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியது. இதனையடுத்து, பேச்சு வார்த்தைக்கு வருமாறு மத்திய அரசு விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தது. இன்று அந்த பேச்சு வார்த்தை நடைபெற உள்ள நிலையில், அந்த பேச்சு வார்த்தையை விவசாயிகள் சங்கத்தினர் புறக்கணிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், இது வரை அமைதி காத்து வந்த சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே, மத்திய அரசை மிக கடுமையாக விமர்சித்து கேள்வி எழுப்பி தனது மெளனத்தை கலைத்து உள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “தேர்தலின் போது விவசாயிகளிடம் வாக்கு கேட்க செல்லும் பாஜக அரசு, விவசாயிகளின் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போது மட்டும் ஏன் அவர்களுடன் சென்று விவாதிக்கக்கூடாது” என்று, கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும், “டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் பாகிஸ்தானிலிருந்து வந்தார்களா?” என்றும், அண்ணா ஹசாரே ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
“விவசாய நாட்டில் விவசாயிகளின் பிரச்சினையை மத்திய அரசு அணுகும் முறை ஏற்புடையதாக இல்லை என்றும், தேர்தல்கள் வரும் போது, அரசியல்வாதிகள் விவசாயிகளிடம் சென்று சில சமயங்களில் அவர்களின் வீட்டிற்குச் சென்று வாக்குகளைக் கேட்கிறார்கள் என்றும், ஆனால் தங்களது வாழ்வாதாரப்
பிரச்னைக்காக விவசாயிகள் போராடும் போது, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் புறக்கணிக்கப்படுகின்றனர்” என்றும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
“இந்தப் போராட்டத்தில் விவசாயி ஒருவர் கொல்லப்பட்டு உள்ளார் என்றும், ஆனாலும் கூட விவசாயிகள் நிதானத்துடன் போராடுகிறார்கள் என்றும்” என்றும், அண்ணா ஹசாரே தெரிவித்து உள்ளார்.
முக்கியமாக, “இந்த மாபெரும் விவசாயப் போராட்டத்தில் வன்முறை வெடித்தால் யார் பொறுப்பு?” என்றும், அண்ணா ஹசாரே கேள்வி எழுப்பி உள்ளார்.
“பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லி சலோ போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும், இந்த இயக்கத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்” என்றும், அண்ணா ஹசாரே அறிவித்து உள்ளார்.
“விவசாயிகள் டெல்லியின் எல்லையில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்த தயாராக உள்ளதாகக் கூறிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கோரிக்கை விவசாயிகளால் நிராகரிக்கப்பட்டது” என்றும், அண்ணா ஹசாரே சுட்டிக்காட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.