டெல்லியில் கடும் குளிரிலும் 12 வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, லண்டனில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாஜக தலைமையிலான மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்த வேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் கடும் கொந்தளிப்பு அடைந்து உள்ளனர். இதன் காரணமாக, புதியு வேளாண் சட்டங்களைத் திரும்ப வலியுறுத்தி வட மாநில விவசாயிகள் ரயில் மறியல், பேரணி உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களைத் கடந்த மாதம் முதல் தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுக் கடந்த 12 நாட்களுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர்.

முக்கியமாக, டெல்லியில் புராரி மைதானத்திலும், சிங்கு, திக்ரி, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைகளிலும் மத்திய அரசுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகள் போராட்டம் இன்று 12 வது நாளாகத் தொடர்ந்து வருகின்றனர்.

டெல்லியில் கடும் குளிர் நிலவி வரும் நிலையிலும் கூட, திறந்த வெளியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று நள்ளிரவில் கூட டெல்லியில் கடும் குளிர் நிலவியது. ஆனாலும், அவற்றைப் பொறுத்துக்கொண்டு விவசாயிகள் போராட்டத்தைக் கைவிடாமல் திறந்த வெளியில் படுத்து உறங்கி வருகின்றனர்.

விவசாயிகளின் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக, அவர்களுடன் மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஆனால், இந்த பேச்சுவார்த்தையானது தொடர்ச்சியாகத் தோல்வியில் முடிவடைந்து வருகிறது. இந்த நிலையில், 9 ஆம் தேதி மீண்டும் இரு தரப்பினரும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர்.

விவசாயிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நடத்தி வரும் இந்த போராட்டத்துக்கு நாடு முழுவதும் நாளுக்கு நாள் ஆதரவு தொடர்ந்து பெருகி வருகிறது.

முக்கியமாக, விவசாயிகளை ஆதரித்து ஏராளமான விளையாட்டு வீரர்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் விருதுகளைத் திருப்பி வழங்கவும் முடிவு செய்து, மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

லண்டனில் செயல்பட்டு வரும் இந்திய உயர் மட்ட குழு அலுவலகம் முன்பாக, ஏராளமான மக்கள் திரண்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது, “பஞ்சாப் விவசாயிகளுக்காக நாங்கள் இருக்கிறோம்” என்றும், அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திடீரென ஏராளமான மக்கள் குவிந்ததால், லண்டன் போலீசார் விரைந்து வந்து போராட்டக்காரர்களைக் கலைத்தனர்.

அத்துடன், 30 க்கு மேற்பட்டவர்கள் ஒரு இடத்தில் கூடினால், அபராதம் விதிக்கப்படும் என்றும் போலீசார் கடுமையாக எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும், அந்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் கோவிட் 19 விதிகளை மீறியதற்காக, போராட்டத்தில் ஈடுபட்ட பலரையும் போலீசார் கைது செய்து உள்ளதாகக் கூறப்படுகிறது.

அது போல், இங்கிலாந்தில் உள்ள பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 36 எம்.பி.க்கள் இந்திய வம்சாவளி எம்.பிக்கள் உள்ளிட்டோர் இங்கிலாந்தின் வெளியுறவு செயலாளர் டோமினிக் ராப் வசம், இந்திய விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து ஆதரவு கடிதம் கொடுத்தனர்.

இதனிடையே, முன்னதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்ததுடன் பிற நாடுகளின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட்டால் இரு நாடுகளின் உறவும் பாதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது.

ஆனாலும், அதன் தொடர்ச்சியாகவும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு மீண்டும் ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.