விவசாயிகளுடன் நடைபெற்ற 8 ஆம் கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வி அடைந்து, 9 வது கட்ட பேச்சு வார்த்தை வரும் 15 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தலைநகர் டெல்லியில் கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் தேதி முதல் மத்திய அரசு இயற்றிய 3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லி எல்லைப் பகுதிகளில் லட்சக்கணக்கான விவசாயிகள் 45 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். விவசாயிகளுடன் நடத்தப்பட்ட பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளில், இதுவரை எந்த முடிவும் எட்டப்படாமல் அடுத்தடுத்து தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கை தொடர்ந்து நிராகரிக்கப்பட்டே வருகிறது.

இதனால், 3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது குறித்து உறுதியான முடிவை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி, அதில் உறுதியாகவும் இருந்து வருகின்றனர். இதன் காரணமாக, ஜனவரி 6 ஆம் தேதி முதல் வரும் 20 ஆம் தேதி வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்றும், அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

முக்கியமாக, தடையை மீறி குடியரசு தினத்தன்று டெல்லியில் நுழைவோம் என்றும், பல்வேறு மாநிலங்களில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் ஜனவரி 23 ஆம் தேதி அன்று நடத்தப்படும் என்றும், குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் தேதி அன்று தலைநகர் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்றும், விவசாயிகள் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இப்படியான சூழ்நிலையில் தான், விவசாயிகளின் இந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், நேற்று முன்பு வரை மத்திய அரசு 7 கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்தி இருந்தது. இதில், கடந்த மாதம் நடந்த நடைபெற்ற 6 வது சுற்று பேச்சு வார்த்தையில், மின்கட்டண விவகாரம், வேளாண் கழிவுகள் எரிப்பதற்கு அபராதம் ஆகிய பிரச்சினைகளுக்கு மட்டுமே தீர்வு காணப்பட்டது.

குறிப்பாக, இது வரை நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இந்த 2 கோரிக்கைகளை மட்டும் மத்திய அரசு இது வரை ஏற்றுக்கொண்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறுதல், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் ஆகிய 2 கோரிக்கைகள் தொடர்பாகவும், இன்னும் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என்றும், இது தொடர்பாக கடந்த 4 ஆம் தேதி நடைபெற்ற 7 வது கட்ட பேச்சு வார்த்தையும், தோல்வியில் முடிந்து போனது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், இரு தரப்பினருக்கும் இடையே 8 வது கட்ட பேச்சுவார்த்தை டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், விவசாயி அமைப்புகளின் 41 உறுப்பினர்களைக் கொண்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அரசு சார்பில், மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே, வர்த்தக மற்றும் உணவுத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் வர்த்தக அமைச்சர் சோம் பிரகாஷ் கலந்து கொண்டனர்.

அப்போது, “வேளாண் சீர்திருத்தச் சட்டங்கள் பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகளால் வரவேற்கப்பட்டுள்ளன என்றும், ஒட்டுமொத்த நாட்டின்
நலன்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்” என்றும், விவசாய தொழிற்சங்கங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், “விவசாய சட்டங்களை ரத்து செய்தால் மட்டுமே போராட்டங்களைக் கைவிட முடியும்” என்று, விவசாய சங்கங்கள் உறுதிபட கூறியுள்ளன.

முக்கியமாக, விவசாய தொழிற்சங்கத் தலைவர்கள் மதிய உணவு இடைவேளை எடுக்க மறுத்து கூட்ட அறையில் அப்படியே காத்திருந்தனர். இதன் காரணமாக, நேற்று நடைபெற்ற 8 வது கட்ட பேச்சு வார்த்தையிலும், எந்த சுமுகமான முடிவும் எட்டப்படவில்லை. இதனால், வரும் 15 ம் தேதி அடுத்த சுற்று பேச்சு வார்த்தை நடத்த இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளனர் என்றும், தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது, இந்த பேச்சு வார்த்தையில், வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறுவதைத் தவிர்த்து, பிற ஆலோசனைகளை விவசாயிகளிடம் அரசு கேட்டுள்ளது. இதற்கு எந்த பதிலும் விவசாயிகள் அளிக்காமல் இருந்துள்ளனர். பல முறை அரசு சார்பில் பதில் கேட்கப்பட்டபோது, “விவசாய சட்டங்களை ரத்து செய்தால் மட்டுமே போராட்டங்களைக் கைவிட முடியும்” என்றும், விடா பிடியாகவும், உறுதியாகவும் தெரிவித்துள்ளனர். இதனால், வேறு வழியின்றி, இந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மிக முக்கியமாக, “சட்டத்தை திரும்பப்பெற்றால் மட்டுமே வீட்டுக்குத் திரும்பி செல்வோம்” என்று, விவசாயச் சங்க தலைவர் ஒருவர் கூட்டத்தில் தெரிவித்தார். மேலும், “விவசாயம் மாநில பட்டியலில் இருப்பதாகப் பல உச்ச நீதிமன்ற தீர்ப்புகளில் சுட்டிகாட்டப்பட்டுள்ளதாகவும், இதனால் மத்திய அரசு அதில் தலையிடக்கூடாது” என்றும், மற்றொரு விவசாய தலைவர் அந்த கூட்டத்தில் தெரிவித்தார்.

குறிப்பாக, “ஒன்று சேர்ந்து வெற்றிபெறுவோம்! அல்லது செத்துமடிவோம்!” என்று, ஒரு விவசாயி அந்த மேஜையில் எழுதிவைத்திருந்தது, சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.