“புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவைப்போம்” என்று, கூறியுள்ள விவசாயிகள் “வேறு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்” என்றும், வலியுறுத்தி உள்ளனர்.
பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் நடந்து வரும் விவசாயிகளின் முற்றுகை போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசுடன் விவசாயிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் அடுத்தகட்ட போராட்டங்களை நோக்கி விவசாயிகள் நகர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய அமைப்புகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை
மேற்கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக டெல்லியில் போராட்டத்தைத் தீவிரப்படுத்த விவசாயிகள் திட்டமிட்டு வருகின்றனர். அதன்படி டெல்லி-நொய்டா சாலையில் அமைந்துள்ள
சில்லா எல்லையில் இன்று மறியலில் ஈடுபடப்போவதாக விவசாயிகள் அறிவித்தனர்.
போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் கூறிய விவசாய அமைப்பினர், “விவசாயிகள் என்ற பெயரில், மத்திய அரசு வேறு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை நிறுத்த வேண்டும்” என்று, வலியுறுத்தினர்.
அத்துடன், “மத்திய அரசு வழங்கிய அனைத்து பரிந்துரைகளையும் நிராகரிப்பதாகவும், 3 சட்டங்களைத் திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும்” என்றும், அவர்கள் உறுதிப்படத் தெரிவித்தனர்.
முக்கியமாக, “புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவைப்போம்” என்றும், விவசாய அமைப்புகள் சூளுரைத்தன.
“விவசாயிகளின் திடீர் சாலை மறியலால் நொய்டா - டெல்லி சில்லா எல்லையில் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டது. இதனால், அந்த பகுதியாக சென்ற வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைந்தனர்.
மேலும், டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகளை அப்புறப்படுத்தக் கோரிய தொடரப்பட்ட வழக்கில், விவசாயிகள் எதிர் கொண்டு வரும் பிரச்சனைகளைத் தீர்க்க தேசிய அளவில் குழு அமைக்க உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது.
அதே போல், டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்துவது தொடர்பாக, சர்வதேச பெண்கள் மல்யுத்த வீரர்கள் மற்றும் சகோதரிகளான பபிதா போகாட், வினேஷ் போகாட் இடையே டிவிட்டர் போர் ஒன்று தொடங்கி உள்ளது. விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த பபிதா போகாட்டுக்கு, அவரின் சகோதரியான வினேஷ் போகாட் அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார். இதனால், வினேஷின் கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் சகோதரிகளுக்கு இடையே நடக்கும் விவாதம் தற்போது அதிகளவில் டிவிட்டர் வாசிகளால் பகிரப்பட்டு வருகிறது.
இதனிடையே, “புதிதாக கொண்டுவரப்பட்ட வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளை குழப்ப சதி நடப்பதாக” பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு நேற்றைய
தினம் உரையாற்றும் போது தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.