“வேளாண் சட்டங்களை திரும்ப பெறாவிட்டால் 8 ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடைபெறும்” என்று, பொதுமக்களுக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்து உள்ளனர்.
மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்த வேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் கடும் கொந்தளிப்போடு காணப்படுகின்றனர். இதனால், புதியு வேளாண் சட்டங்களைத் திரும்ப வலியுறுத்தி வட மாநில விவசாயிகள் ரயில் மறியல், பேரணி உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களைத் கடந்த மாதம் முதல் தொடர்ச்சியாக நடத்தி வந்தனர்.
தற்போது அதன் தொடர்ச்சியாக பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் தங்களது கடும் எதிர்ப்பை மத்திய அரசுக்கு கடந்த சில வாரங்களாகத் தொடர்ச்சியாகத் தெரிவித்து வருகின்றனர். போராட்டத்தின் அடுத்த கட்டமாக, மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றைத் திரும்ப பெற வலியுறுத்தியும் அரியானா, பஞ்சாப், கேரளா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட 6 மாநில விவசாயிகள் டெல்லி நோக்கி கடந்த ஒரு வார காலமாக டிராக்டரிலும், நடந்தும் பேரணியாகத் தலைநகருக்கு புறப்பட்டு வந்த நிலையில், கடும் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக, தலைநகர் டெல்லியை முற்றுகையிடும் விதமாக டெல்லி தலைநகருக்குப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தில், 30 க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் கலந்துகொண்டு வருகின்றன. இந்த போராட்டம் இன்று 10 வது நாளாக நீடித்து வருகிறது. விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை ஏற்படாமல் தடுக்க டெல்லி போலீசார் எல்லைப் பகுதிகளில் குவிக்கப்பட்டு உள்ளனர். இதே போன்று அரியானா மற்றும் பஞ்சாப் மாநில எல்லைகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
டெல்லியில் புராரி மைதானத்தில் ஒரு பிரிவினரும், மீதமுள்ள விவசாயிகள் டெல்லி எல்லைகளிலும் திரண்டு போராடுவதால் தலைநகர் முழுவதும் அப்படியே ஸ்தம்பித்துப் போய் உள்ளது.
அத்துடன் அங்குள்ள சிங்கு, திக்ரி, காஜிப்பூர் போன்ற எல்லைகளைப் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் ஆக்கிரமித்து இருப்பதால், அண்டை மாநிலங்களுடனான தொடர்பை தலைநகர் டெல்லி இழந்து வருகிறது.
அதே போல். அரியானா, உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு செல்லும் பிரதான சாலைகள் மூடப்பட்டு உள்ளன. இதனால், பொதுமக்கள் அந்த வழியாக செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதற்காகவும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட பாதுகாப்பு அளிப்பதற்காகவும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை உடனடியாக கூட்டுமாறு மத்திய அரசுக்கு விவசாயிகள் சங்கங்கள் கோரிக்கை விடுத்து உள்ளன.
மேலும், விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் கடந்த 1 ஆம் தேதி விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சு வார்த்தை நடத்தியது. இதில், மத்திய அரசு சார்பில் பங்கேற்ற மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், வர்த்தக இணை மந்திரி சோம் பர்காஷ் ஆகியோர் வேளாண் சட்டங்களில் உள்ள பிரச்சினைகளை ஆராயக் குழு அமைக்க பரிந்துரை செய்தனர். ஆனால், இதை விவசாயிகள் ஏற்க மறுத்ததால், அன்றைய பேச்சுவார்த்தை அப்படியே தோல்வியில் முடிந்தது.
இதனையடுத்து, நேற்று முன் தினம் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. டெல்லி விஞ்ஞான் பவனில் நடந்த இந்த பேச்சு வார்த்தையில் சுமார் 40 விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அவர்களுடன் மத்திய அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 8 மணி நேரம் நீடித்த இந்த பேச்சு வார்த்தையில், வேளாண் சட்டங்கள் தொடர்பான விவசாயிகளின் கவலைகள் மற்றும் சந்தேகங்களைத் தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய அமைச்சர்கள் உறுதி அளித்தனர். எனினும், இந்த புதிய சட்டத்தில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, விவசாயிகள் தொடர்ந்து போர்க்கொடி தூக்கியதால் இந்த பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாமல் நிறைவு பெற்றது.
அதன் தொடர்ச்சியாக, டெல்லியில் 10 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் நேற்று கூடி ஆலோசனை நடத்தினர். இதில், தங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால்,
போராட்டத்தைத் தீவிரப்படுத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.
இது தொடர்பாக விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் செய்தியாளர்களிடம் கூறும்போது, “இன்று நடைபெறும் பேச்சு வார்த்தையில், எங்களது கோரிக்கையை மத்திய அரசு ஏற்காவிட்டால், எங்களது போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம்” என்று, திட்டவிட்டதாகக் கூறினர்.
முக்கியமாக, “வரும் 8 ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம் செய்யவும் நாட்டு மக்களுக்கு, விவசாயிகள் அழைப்பு விடுத்தனர்.
அத்துடன், “அன்றைய தினம் அனைத்து சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளையும் முற்றுகையிடுவோம் என கூறிய விவசாயிகள், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால் டெல்லிக்கு வரும் அனைத்து சாலைகளையும் வருகிற நாட்களில் அடைப்போம்” எனவும், விவசாயிகள் எச்சரித்து உள்ளனர்.
இதனிடையே, டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று 5 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருடன் பிரதமர் மோடி இன்று காலை ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.