டெல்லியில் மசாஜ் சென்டர் சென்ற இளம் விஞ்ஞானி கடத்தப்பட்டு 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, பலரும் வேலை இழந்து தவித்து வருகின்றனர். இதனால், வேறு வழியின்றி பணம் சம்பாதிக்கத் திருட்டு, வழிப்பறியில் சிலர் தொடர்ச்சியாக ஈடுபடத் தொடங்கி உள்ளனர். அப்படிதான், டெல்லியில் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.
டெல்லியில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் அலுவலகத்தில் பணி புரியும் இளம் விஞ்ஞானி ஒருவர், அங்குள்ள நொய்டா குடியிருப்பில் வசித்து வந்தார்.
தற்போது அவருக்கு விடுமுறை தினம் என்பதால், குதூகலமாக இருக்க மசாஜ் சென்டர் சென்று மசாஜ் செய்து, ஜாலியாக இருக்க அவர் விரும்பி உள்ளார்.
அதன்படி, தன் சேல்போனிலேயே இணையதளம் மூலம் மசாஜ் சென்டர் மையங்கள் பற்றித் தேடி உள்ளார். அப்படி, ஒரு குறிப்பிட்ட மசாஜ் சென்டர் மையத்தின் தொடர்பு எண்ணைத் தேடி எடுத்து, அவர்களைத் தொடர்பு கொண்டு உள்ளார். அதன்படியே, கடந்த 26 ஆம் தேதி மாலை மசாஜ் சென்டரிலிருந்து வந்த ஒரு நபர், அந்த இளம் விஞ்ஞானியை அங்கிருந்து அழைத்துக்கொண்டு மசாஜ் செய்வதற்காக, அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு அழைத்துச் சென்று உள்ளார்.
அங்கு, ஒரு பெண் அந்த இளம் விஞ்ஞானிக்கு மசாஜ் செய்வது போல், வந்துள்ளார். அந்த நேரம் பார்த்து, அந்த ஓட்டல் அறையில் மறைந்திருந்த சிலர், திடீரென்று அந்த விஞ்ஞானி முன்பு வந்து நின்று, “நாங்கள் போலீஸ்” என்று கூறி, அந்த இளம் விஞ்ஞானியை மிரட்டி உள்ளனர். ஆனால், அவரோ சற்றும் பயம் இல்லாமல் பதில் அளித்துப் பேசியிருக்கிறார்.
அதன் தொடர்ச்சியாக, அந்த மர்ம நபர்கள், அந்த விஞ்ஞானியை அந்த ஓட்டல் அறையில் பிணைக் கைதியாக அடைத்து வைத்து, அவரது குடும்பத்தினரிடம் 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். இதனால், பதறிப்போன அந்த விஞ்ஞானியின் குடும்பத்தார், அந்த கடத்தில் கும்பலிடம் பேரம் பேசி வந்தனர்.
அதே நேரத்தில், விஞ்ஞானி கடத்தப்பட்ட சம்பவம் குறித்து, அடுத்த நாள் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, விஞ்ஞானியின் குடும்பத்தினருக்கு வரும் போன்களை ஆய்வு செய்து, அந்த போன் எங்கிருந்து வருகிறது என்று ஆய்வு செய்து, அதன்படி அந்த இடத்திற்கு விரைந்து சென்று உள்ளனர்.
அதன்படி, குறிப்பிட்ட அந்த ஓட்டல் அறைக்குள் நள்ளிரவு நேரத்தில் அதிரடியாக போலீசார் நுழைந்து உள்ளனர். அப்போது, போலீசாரை கண்ட அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். ஆனாலும், போலீசார் அவர்களை விரட்டிப் பிடித்ததில், ஒரு பெண் உட்பட 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
மேலும், கடத்தப்பட்ட விஞ்ஞானியைப் பத்திரமாக மீட்ட போலீசார், உடனடியாக அந்த ஓட்டலில் சோதனையும் மேற்கொண்டனர். அப்போது, அங்கிருந்து கடத்தலுக்குப் பயன்படுத்திய சில பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் கைது செய்யப்பட்ட பெண் உட்பட 3 பேரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விஞ்ஞானியை கடத்திய போல், வேறு யாரையெல்லாம் கடத்தப்பட்டு, மிரட்டி பணம் பறிக்கப்பட்டு உள்ளார்கள் என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.