“என்னை வாளால் வெட்ட வந்தார்கள் மற்றும் எங்களைத் தாக்கியது குண்டர்களே தவிர விவசாயிகள் அல்ல” என்று, தாக்குதலுக்கு ஆளான டெல்லி போலீசார்
தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, லட்சணக்கான விவசாயிகள் தலைநகர் டெல்லியில் கடந்த 2 மாதங்களாக போராடி வருகிறார்கள்.

முக்கியமாக, குடியரசு தின விழாவில் டிராக்டர் பேரணியின் போது விவசாயிகள் செங்கோட்டைக்குள் சென்று, அங்கு கொடி ஏற்றினார்கள் என்று குற்றம்சாட்டப்படுகிறது. அப்போது, பெரும் கலவரம் வெடித்ததாகவும் கூறப்பட்ட நிலையில், இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகளைச் சிலர் எதிர்மறையாகச் சித்தரித்தனர். இதனையடுத்து, “உரிமைக்காகப் போராடும் விவசாயிகளைக் கொலைகாரர்களாகச் சித்தரிப்பதா?” என்று, கேள்வி எழுப்பி முதலமைச்சருக்கு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கேள்வியை எழுப்பி கோரிக்கை கடிதம் அளித்தார்.

குறிப்பாக, “தேசப்பற்றும் தேசியமும் சிலருக்கு மட்டுமே சொந்தமானது அல்ல” என்று, நன்னம்பிக்கை பேரணியில் விவசாயிகள் முழங்கினார்கள்.

அத்துடன், விவசாயிகள் குடும்பத்தில் இருந்து தான், ராணுவத்திற்கு இளைஞர்கள் வருகிறார்கள் என்றும், அவர்களை யாரும் தவறாகச் சித்தரிக்க வேண்டாம் என்ற குரல்களும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி உள்ளன.

இந்நிலையில், 53 வயதான காவல் துறை துணை ஆணையர் ஜொகீந்தர் ராஜ் சம்பவம் நடந்த அன்று என்ன நடந்தது என்பதை விவரிக்கிறார். அதன் படி, “நான் என் பணியில் நிறையப் போராட்டங்களையும், கலவரங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் பார்த்து இருக்கிறேன். ஆனால், இது போன்ற ஒன்றைச் சந்தித்ததே இல்லை” என்று, குறிப்பிட்டுள்ளார்.

“போராட்டத்தின் போது எனது முதுகு பகுதி, தோள்பட்டை என்று என்னைக் கடுமையாகத் தாக்கினார்கள். எந்தப் பக்கத்திலிருந்து தாக்கினார்கள் என்று கூட எனக்குத் தெரியவில்லை. என்னை வாளால் வெட்ட முயன்றபோது தான், நான் அங்கிருந்து தப்பினேன். இருப்பினும், எங்கள் மீது தொடர்ந்து கற்களை எறிந்தார்கள்” என்று, பதற்றத்துடன், அவர் கூறினார்.

முக்கியமாக, “எங்களைத் தாக்கியது குண்டர்கள் தான் என்றும், விவசாயிகள் அல்ல” என்றும், பாதிக்கப்பட்ட அந்த டெல்லி போலீசார் கூறியுள்ளார்.

மேலும், “இந்தக் கலவரம் தொடர்பாக இதுவரை 25 எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 19 பேர் கைதாகி உள்ளனர்.

அதே நேரத்தில், “விவசாயிகள் பேரணியில் சமூக விரோதிகள் மற்றும் பாஜகவினரே ஊடுருவி வன்முறையில் ஈடுபட்டதாக” விவசாயச் சங்கங்கள் பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், “செங்கோட்டைக்குள் விவசாயிகள் செல்லும் வரை போலீஸ் என்ன செய்துகொண்டிருந்தது?” என்றும், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.