தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று வருமா? வராதா? என்பது குறித்து மத்திய அரசு புதிய விளக்கம் அளித்து உள்ளது.
இந்தியாவில் கொரோனா தாக்கம் தற்போது வீரியம் எடுத்து பரவி வருகிறது. நாட்டில் திரும்பிய திசையெல்லாம் தொற்று பாதிப்பு அதிக அளவில் காணப்பட்டு வருகின்றன.
இப்படியா நிலையில், இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டி உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,14,835 பேருக்கு
கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவற்றுடன், கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 2,104 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்து உள்ளனர். நாட்டில் தற்போது கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையானது 22,91,428 ஆக உயர்ந்து உள்ளது.
இதனால், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1.56 கோடியாக அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில் தான், இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனாவைத் தடுக்க கோவிஷீல்டு, கோவாக்ஸின் தடுப்பூசிகள் பொது மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், கொரோனாவை தற்போது போடப்பட்டு வரும் தடுப்பூசி முற்றிலுமாக தடுக்குமா என்ற சந்தேகமும், குழப்பமும் மக்கள் மத்தியில் எழுந்துகொண்டே இருந்தது.
அத்துடன், “தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று வருமா? வராதா?” என்கிற கேள்வியும் பொது மக்கள் மத்தியில் எழுந்துகொண்டே இருந்தது.
இந்நிலையில், இந்த சந்தேகங்களுக்கெல்லாம் மத்திய அரசு ஸ்லைடு வழியாக தற்போது விளக்கம் அளித்து உள்ளது.
அதன் படி, “நாடு முழுவதும் இது வரை 1.01 கோடி பேருக்கு கோவாக்ஸின் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என்றும், இதில், 93,56, 436 பேர் முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டனர்” என்றும், கூறப்பட்டு உள்ளது.
“இப்படியாக, தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களில் 4,208 பேருக்கு, அதாவது 0.04 சதவிகிதத்தினுக்கு மட்டுமே கொரோனா தொற்று கண்டறியப்பட்டு இருக்கிறது” என்றும், அதில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
குறிப்பாக, “2 வது தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்ட 17,37,178 பேரில் 695 பேருக்கு மட்டும் தான், கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது என்றும், இப்படியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையான 0.04 சதவிகிதம் மட்டுமே ஆகும்” என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், “கோவிஷீல்டு தடுப்பூசியை இது வரை 11.6 கோடி பேர் செலுத்திக்கொண்டு உள்ளனர். அதே போல், முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்ட 10,03,02,745 பேரில் 17,145 சதவிகிதம் பேர் மட்டுமே கொரோனாவால் தற்போது வரை பாதிக்கப்பட்டு உள்ளனர். இது 0.02 சதவிகிதம் ஆகும்.
அதே போல், 2 வது தவணை கோவாக்ஸின் தடுப்பூசியை 1,57,32,754 பேர் எடுத்துக்கொண்டனர். இவர்களில் 5014 பேர் மட்டும் கொரோனாவால் தற்போது வரை பாதிக்கப்பட்டு உள்ளனர். இது 0.03 சதவிகிதம் ஆகும்” என்று, மத்திய அரசு விளக்கம் அளித்து உள்ளது.
அத்துடன், “இந்தியாவில் கொரோனாவின் இரு அலைகளும் ஒரே மாதிரியான பாதிப்புகளையே ஏற்படுத்துவதாக” மத்திய சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்து உள்ளார்.
முக்கியமாக, “முதல் அலையில் 10 முதல் 20 வயதினரில் 8.07 சதவீதம் பாதிப்புக்குள்ளானதாகவும், இது 2 வது அலையில் 8.50 சதவீதமாகப் பதிவாகி இருப்பதாகவும்” மத்திய சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.