“சட்டப்படி திருமணமான மனைவியை, அவருக்கு விருப்பம் இல்லாமல் வற்புறுத்தி பாலியல் உறவில் ஈடுபடுவது பாலியல் வன்கொடுமை ஆகாது” என்று, அதிரடி கருத்து ஒன்றை சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் முன்வைத்திருக்கிறது.
சத்தீஸ்கர் மாநில அமர்வு நீதிமன்றத்தில் பெண் ஒருவர், தனது கணவர் மீது திருமண பாலியல் வன்கொடுமை குறித்து வழக்குத் தொடர்ந்திருந்தார்.
அந்த புகார் மனுவில், “இயற்கைக்கு முரணான வகையில் தன்னிடம் உறவில் ஈடுபடுவதாகவும்” அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த வழக்கில், பாலியல் பலாத்காரம், இயற்கைக்கு முரணான உடலுறவு, பெண்களுக்கு எதிரான கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் அந்த கணவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
இதனால், அதிர்ச்சியடைந்த அந்த நபர், இதனை எதிர்த்து சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம், இரு தரப்பு கருத்தையும் கேட்ட, “நீதிமன்றம் சட்டப்படி திருமணமான மனைவியை அவருக்கு விருப்பம் இல்லாமல் வற்புறுத்தி பாலியல் உறவில் ஈடுபடுவது திருமண பாலியல் வன்கொடுமை ஆகாது” என்று, கருத்து கூறியது.
“ஆனாலும், குற்றம் சாட்டப்பட்ட அந்த பெண்ணின் கணவன் மீது இந்திய சட்டப் பிரிவு 377 ன் கீழ், வழக்குப் பதிவு செய்யவும்” நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்து உள்ள வழக்கை விசாரித்த நீதிபதி என்.கே. சந்திரவான்ஷி, “தனது தீர்ப்பில், 375 (2) க்கு விதிவிலக்காக, மனைவி 18 வயதுக்கு கீழ் இருந்தால் மட்டுமே திருமணத்திற்குப் பிறகு கணவன் வற்புறுத்தி பாலியல் உறவு வைத்துக்கொள்வது குற்றம் என்றும், மனைவிக்கு 18 வயதுக்கு மேல் இருக்கும் பட்சத்தில், அது பாலியல் வன்கொடுமை குற்றமாக எடுத்துக்கொள்ளப் படமாட்டாது” என்றும், தெளிவுபடுத்தினார்.
அதே நேரத்தில், “குற்றம்சாட்டப்படும் நபர்களின் நோக்கமானது, இயற்கைக்கு மாறான பாலியல் உறவில் திருப்தியைப் பெறுவதாக இருந்தால், அது சட்டப் பிரிவு 377 இன் கீழ் சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானது என்று கூறமுடியாது என்றும், இயற்கைக்கு எதிரான முறையில் பாலியல் உறவு கொள்வது பிரிவு 377 இன் கீழ் அது குற்றச் செயலையே குறிக்கும்” என்றும், தனது கருத்தைத் தெளிவாகக் கூறினார்.
அதே போல், சட்டப்பிரிவு 498 (ஏ), 34, 376 மற்றும் 377 ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர் மீதும், 498 (ஏ) இன் கீழ் அந்த நபரின் உறவினர் மீதும் வழக்குப் பதிவு செய்ய” நீதிமன்றம் உத்தரவிட்டு அதிரடியாகத் தீர்ப்பளித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இந்த மாதத்தின் தொடக்கத்தில் இதே போன்ற ஒரு வழக்கு ஒன்றில் கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. அந்த வழக்கில், “திருமணத்திற்குப் பின்பு கணவரால் மனைவி அனுபவிக்கும் பாலியல் வன்முறை விவகாரத்து கோருவதற்கு போதுமான காரணமாக உள்ளது” என்று, நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.