விவசாயிகள் போராட்டம் தொடர்பாக மத்திய அரசுடன் இன்று நடைபெற இருந்த பேச்சுவார்த்தை இல்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில்,
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது.

பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தலைநகர் டெல்லியின் எல்லைப் பகுதியில் 14 வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அத்துடன், நாளுக்கு நாள் விவசாயிகளுக்கு ஆதரவு அதிகரித்து
வருகிறது.

மேலும், விவசாயிகளுடன் இது வரை 5 கட்டங்களாக மத்திய அரசு பேச்சு வார்த்தை நடத்தியும், அதில் எந்த முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்த நிலையில், இன்று 6 ஆம் கட்டமாக மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த இருந்தது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், வேளாண் சட்டத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு மேற்கொள்ள உள்ள 6 வது சுற்று பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, உள் துறை அமைச்சர் அமித் ஷா நேற்று இரவு தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிற்சங்கத் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.

விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக உள் துறை அமைச்சர் அமித் ஷா, பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நேற்று இரவு 8 மணிக்குப் பிறகு தொடங்கிய இந்தக் கூட்டத்திற்கு 13 விவசாயிகள் சங்கத் தலைவர்கள் வரவழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதன் படி, விவசாயிகள் சங்கத் தலைவர்களில் பஞ்சாபிலிருந்து 8 பேரும், நாடு தழுவிய பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 5 பேரும் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது

அதன் பின்னர் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அனைத்திந்திய விவசாய சபையின் பொதுச்செயலாளர் ஹன்னன் மொல்லா, “விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெறாது” என்று குறிப்பிட்டார்.

“விவசாய தலைவர்களிடம் அரசின் முன்மொழிவு ஒன்று இன்று வழங்கப்படும் என தங்களிடம் மத்திய அமைச்சர் கூறியதாகவும்” அவர் கூறினார்.

“அரசின் முன்மொழிவு குறித்து விவசாய தலைவர்கள் ஆலோசிப்பார்கள் என்றும், மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற தயாராக இல்லை” என்றும், ஹன்னன் மொல்லா தெரிவித்தார்.

“இது தொடர்பாக டெல்லி - அரியானாவின் சிங்கு எல்லை பகுதியில் இன்று விவசாயிகளிடையே ஆலோசனை கூட்டம் நடத்தப்படும்” என்றும், அவர் குறிப்பிட்டார்.

அது நேரத்தில், புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று மாலை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளனர். இதில், காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி, திமுக சார்பில் டி.கே.எஸ். இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் சரத்பவார் ஆகியோர் அடங்கிய குழு, குடியரசுத் தலைவரை சந்திக்க இருக்கிறது.

இந்த சந்திப்பின் போது, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதன் மூலம் விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தவுள்ளனர்.

அதே போல், இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லியில் 14 வது நாளாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் திட்டவட்டமாகத் தெரிவித்து இருக்கிறார்கள்.

இதன் காரணமாக, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று காலை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.