ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டிருக்கும் இந்தியாவின் டாப் 100 கோடீஸ்வரர்களின் பட்டியலில் 4 தமிழர்கள் இடம்பிடித்திருப்பது பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.

ஃபோர்ப்ஸ் இதழ் ஒவ்வொரு ஆண்டும் இந்திய அளவிலான டாப் 100 கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், தற்போதைய 2021 ஆம் ஆண்டுக்கான இந்திய கோடீஸ்வரர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் தற்போது வெளியிட்டு இருக்கிறது.

ஃபோர்ப்ஸ் இதழ் தற்போது வெளியிட்டு இருக்கும் இந்த பட்டியலில், முகேஷ் அம்பானி முதல் இடத்தை பிடித்து உள்ளார்.

முக்கியமாக, இந்த இந்திய கோடீஸ்வரர்களின் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 தமிழர்களும் இடம் பிடித்து இருக்கிறார்கள்.

அதன் படி, இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் வரிசையில் தமிழகத்தைச் சேர்ந்த சிவ நாடார் இடம் பிடித்திருக்கிறார்.

சிவ நாடார், ஒட்டு மொத்த அளவில் அம்பானி மற்றும் அதானிக்கு பிறகு இந்தியாவின் 3 வது மிகப் பெரிய கோடீஸ்வரராக திகழ்ந்து வருகிறார்.

அதன் படி, சிவ நாடாரின் சொத்து மதிப்பானது 31 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளதாகவும், ஃபோர்ப்ஸ் இதழ் கூறியுள்ளது. சிவ நாடார், ஹெச்.சி.எல் எனும் மென்பொருள் நிறுவனத்தின் நிறுவன தலைவராக இருந்த அவர், தற்போது அந்த நிறுவனத்தின் தலைவர் பதவியை அவரின் மகள் ரோஷ்னி அலங்கரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல், தமிழகத்தைச் சேர்ந்த முருகப்பா குழுமம், இந்தியாவின் 41 வது பெரும் கோடீஸ்வரரின் பட்டியலில் இடம் பெற்று உள்ளது.

இக்குழுமத்தின் சொத்து மதிப்பானது, 4.7 பில்லியன் டாலர்களாக உள்ளன. கடந்த 1900 ஆம் ஆண்டு ஏ.எம்.முருகப்ப செட்டியாரால் தொடங்கப்பட்ட இந்த குழுமம், தற்போது 28 தொழில்களை மேற்கொண்டு வருகிறது. இக்குழுமத்தின் தலைவராக தற்போது இருப்பவர் எம்.எம்.முருகப்பன் என்பவர் இருந்து வருகிறார்.

அதே போல், இந்தியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் 68 வது இடத்தில் ஹட்சன் ஆக்ரோ நிறுவனத்தின் தலைவரான ஆர்.ஜி.சந்திர மோகன் இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு 3.05 பில்லியன் டாலர்களாக இருக்கிறது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்து உள்ள திருத்தங்கலை சேர்ந்தவரான சந்திர மோகன், தமிழகத்தின் பிரபலனான அருண் ஐஸ் கிரீம் பிராண்டை தோற்று வித்தவர் ஆவர். அத்துடன், ஆரோக்யா மற்றும் ஹட்சன் போன்ற பிராண்டுகளில் வெளிவரும் பால், தயிர் போன்ற பொருட்கள் சந்தையில் பிரபலமானதாக விளங்கி வருகிறது.

மேலும், தென்னிந்தியாவில் பல்வேறு மொழிகளில் டிவி சேனல்கள், ரேடியோ, செய்தித்தாள்கள், பத்திரிகைகள் நடத்தி வரும் சன் குழுமத்தின் தலைவரான கலாநிதி மாறன், இந்திய கோடீஸ்வரர்களின் டாப் 100 பட்டியலில் இடம் பெற்று உள்ளார்.

இவரது சொத்து மதிப்பானது 2.75 பில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பட்டு உள்ளது. அதன் படி, கலாநிதி மாறன் இந்திய கோடீஸ்வரர்களின் பட்டியலில் இந்த ஆண்டு 78 வது இடத்தை பிடித்து இருக்கிறார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் அணிக்கும், கலாநிதி உரிமையாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது.