திருமணத்தின் போது மணமேடையில் மணப்பெண் திடீரென்று இறந்து போனதால், அந்த துயரமான நிகழ்வுகளுக்கு மத்தியலும், பெண்ணின் தங்கையை மணமகன் திருமணம் செய்துகொண்டார்.
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் தான் இப்படி ஒரு விநோத சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் எட்டவா மாவட்டத்திற்கு உட்பட்ட சந்தாப்பூர் பகுதியைச் சேர்ந்த மனோஜ் குமாருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சுரபி என்ற இளம் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
திருமணத்துக்காக இருவீட்டார் சார்பில் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்யப்பட்டு இருந்தன. அத்துடன், கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி, திருமணத்திற்கான சடங்கு முறைகள் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது.
அதன் படி, இரு வீட்டார் உறவினர்கள் புடைசூழத் திருமண சம்பிரதாய சடங்குகள் அனைத்தும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில், நேற்றைய தினம் திருமண நாளும் வந்தது.
அப்போது, மண மேடைக்கு வந்த மணமகன் - மணமகள் இருவரும், ஒருவருக்கு ஒருவர் மாலையை மாற்றிக்கொண்டனர். அப்போது, மணப்பெண் சுரபி திடீரென மயங்கி அந்த மணமேடையில் சரிந்து கீழே விழுந்தார்.
இதனால், பதறிப்போன பெண் வீட்டார், உடனடியாக அவரது முகத்தில் தண்ணீரைத் தெளித்து, கண் விழிக்க வைக்க முயன்றனர். ஆனால், அப்போது, அந்த பெண்ணிற்கு எதிர்பாராதவிதமாகக் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
அப்போது, அவரை பரிசோதிக்க உடனடியாக ஒரு டாக்டரை அங்கு அழைத்து உள்ளனர். இது குறித்து அங்கு விரைந்து டாக்டர், மயங்கிய பெண்ணை பரிசோதனை செய்தார். இதனையடுத்து, “மணப்பெண் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாக” தெரிவித்தார்.
மணிமேடையில் மயங்கி விழுந்த மணப்பெண், தாலி கட்டும் சில நிமிடங்களுக்கு முன்பாக உயிரிழந்தது, அந்த பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மண்டபத்தில் கூடியிருந்த இரு வீட்டார் மத்தியிலும் கடும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதனால், அப்போது என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை. பெண் வீட்டார் அப்படியே பரிதவித்துப் போனார்கள். அதே நேரத்தில், திருமணத்தை நிறுத்த வேண்டாம் எனக் உறவினர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொண்டனர். இதனைக் கேட்ட பெண் வீட்டார், உயிரிழந்த பெண்ணின் மற்றொரு தங்கையான நிஷாவை மணமகனுக்குத் திருமணம் செய்து வைக்க, முன் வந்தனர்.
எனினும், தடைப்பட்ட திருமணத்தை உடனடியாக நடத்தத் திட்டமிட்ட இரு வீட்டாரின் உறவினர்களும், மணப்பெண்ணின் தங்கையை அழைத்து, மணமகனுக்குத் திருமணம் செய்து வைத்தனர். இரு வீட்டார் மற்றும் மண மக்களின் சம்மதத்துடன் கண்ணீர் மல்க இந்த திருமணம் நடைபெற்று முடிந்தது.
இந்த திருமணம் முடியும் வரையில், இறந்து போன மணப்பெண்ணின் உடலை, அவரது உறவினர்கள் சேர்ந்து, அங்குள்ள ஓரு அறையில் வைத்திருந்தனர்.
திருமணம் முடிந்த பிறகு, உயிரிழந்த மணப்பெண் சுரபிக்கான இறுதி மரியாதை இரு வீட்டாரும் சேர்ந்து கண்ணீர் மல்க செய்தனர். இந்த சம்பவம், அந்த ஊர்
மக்களையே கடும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.