முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் காலமானார். அவருக்கு வயது 82. பாஜகவின் மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங். இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு தவறிவிழுந்த காரணத்தால் தலையில் அடிப்பட்டு டெல்லி ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு 6 ஆண்டுகளாக கோமாவில் இருந்த ஜஸ்வந்த் சிங்,கடைசி வரை நினைவுத் திரும்பாமலேயே இன்று காலமானார்.
இவர் வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை, நிதித் துறை உள்ளிட்ட பதவிகளை வகித்தவர். இவர் பாஜக நிறுவனத் தலைவர்களில் ஒருவராக இருந்தார். தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக எம்பியாக இருந்தவர். வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியில் 1996-ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை இவர் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். பாஜகவை வலுப்படுத்தியதில் இவர் முக்கியமான தலைவர்.
இவருக்கு அண்மை காலமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில் அவர் இன்று காலை மறைந்தார். இந்திய ராணுவத்திலிருந்து ஜஸ்வந்த் சிங் ஓய்வு பெற்றவர். பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்புத்துறை அமைசச்சர் ராஜ்நாத் சிங், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் மீண்டும் உடல்நலக் குறைவால் ஜஸ்வந்த் சிங் பாதிக்கப்பட்டு ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த 3 மாதங்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு ஜஸ்வந்த் சிங் காலமானார்.
ஜஸ்வந்த் சிங்கின் உடல் சொந்த மாநிலமான ராஜஸ்தானுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, ஜோத்பூரில் தகனம் செய்யப்பட உள்ளதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ள ட்விட்டர் இரங்கல் செய்தியி்ல், “இந்த தேசத்துக்காக விடாமுயற்சியுடன் ஜஸ்வந்த் சிங் தனது கடமைகளையும், பணிகளையும் செய்துள்ளார். முதலில் ராணுவ வீரராகவும், பின்னர் அரசியலிலும் இணைந்து தனது பங்களிப்பை தேசத்துக்காகச் செய்தார். வாஜ்பாய் அரசில், முக்கியமான அமைச்சகப் பொறுப்புகளை வகித்த ஜஸ்வந்த் சிங், நிதி, பாதுகாப்பு, வெளியுறவுத்துறையில் அழுத்தமான முத்திரை பதித்தார். அவரின் மறைவு என்னை வேதனைப்படுத்துகிறது.
அரசியலிலும், சமூகத்துக்கும் ஜஸ்வந்த் சிங் செய்த பங்களிப்பு நினைவுகூரத்தக்கது. பாஜகவை வலிமைப்படுத்திய தலைவர்களில் ஒருவராக ஜஸ்வந்த் சிங் இருந்தார். எங்களுக்குள் நடந்த உரையாடல்கள் எப்போதும் நினைவில் நிற்பவை. ஜஸ்வந்த் சிங்கின் மகன் மன்விந்தர் சிங்கிடம் பேசினேன். ஜஸ்வந்த் சிங் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி” என்று மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “இந்த தேசத்துக்குச் சேவை செய்தவகையில் ஜஸ்வந்த் சிங்கின் புத்திசாலித்தனமான திறமை நினைவுகூரத்தக்கது. ராஜஸ்தானில் பாஜகவை வலிமைப்படுத்திய முக்கியத் தலைவராக ஜஸ்வந்த் சிங் இருந்தார். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட இரங்கல் செய்தியில், “ராஜஸ்தானின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜஸ்வந்த் சிங் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள்’’ எனத் தெரிவித்துள்ளார்.