உலகம் முழுவதும் பரவி, மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்துள்ள கொரோனா வைரஸினால் நாளுக்கு நாள் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய கணக்குப்படி, இந்தியா முழுவதும் 13,37,051 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 8,50,107 பேர் குணமடைந்து, 4,55,118 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த கடந்த 5 மாதங்களாக இந்தியா முழுவதும் முழு ஊரடங்கும், சில தளர்வான ஊரடங்கும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில், வெளிமாநிலங்களிலும், வெளிமாவட்டங்களில், பலர் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றனர். அதில், சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாத பலருக்கும், உணவுக்காக மிகவும் உதவியாக இருப்பது ஸ்விக்கி, ஜொமோட்டோ போன்ற செயலிகள் தான்.
ஆன்லைன் டெலிவரிகளை பாதுகாப்போடு மேற்கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் டெலிவரி செய்யவும் நிபந்தனைகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், ஹோட்டல்களில் உள்ள உணவு தயாரிப்பாளர்கள், பார்சல் செய்பவர்கள், டெலிவரி பாய்ஸ் என அனைவருக்கும் தினசரி காலை காய்ச்சல், உடல் வெப்பநிலை குறித்த சோதனை மேற்கொள்ளப்பட்டு, பல்வேறு பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது, ஸ்விக்கி நிறுவனம் StatEATistics report: The Quarantine Edition என்ற பெயரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், லாக்டவுன் காலத்தில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளைக் குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் எப்போதும் போலவே, பிரியாணி தான் முதலிடத்தில் உள்ளது. காலங்கள் மாறினாலும், அதற்கேற்ற முறையில் விதவிதமான உணவு வகைகள் வந்தாலும், எப்போதும் பிரியாணி தான் ராஜா என்பதை யாராலும் மறுக்க முடியாது. லாக்டவுனில் மட்டும் 5.5 லட்சம் ஆர்டர்களை பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. பிரியாணியைத் தொடர்ந்து பட்டர் நான் மற்றும் மசாலா தோசைக்கான ஆர்டர்கள் அதிகப்படியாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சுமார் 32.3 கோடி கிலோ வெங்காயமும், 5.6 கோடி கிலோ வாழைப்பழங்களையும் ஸ்விகி மூலம் ஆர்டர் செய்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாகத் தினசரி சரியாக இரவு 8 மணிக்கு 65 ஆயிரம் இரவு உணவுகளுக்கு ஆன்லைன் ஆர்டர் செய்யப்படுவதாக ஸ்விகி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த நேரங்களில் மட்டும், 75 ஆயிரம் கிருமி நாசினிகள், 47 ஆயிரம் முகக் கவசங்கள், 3 லட்சத்து 50 ஆயிரம் நூடுல்ஸ் பொட்டலங்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதோடு 1 லட்சத்து 29 ஆயிரம் சாக்கோ லாவா கேக்குகள், 1 லட்சத்து 20 ஆயிரம் பிறந்த நாள் கேக்குகளை ஸ்விகி மூலம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவின் ஊரடங்கு காலத்தின்போது உணவு, மளிகை சாமான்கள், மருந்துகள் மற்றும் பிற வீட்டுப் பொருட்கள் என மொத்தமாக, இதுவரை 4 கோடி ஆர்டர்களை வழங்கியுள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.
-பெ.மதலை ஆரோன்.