விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று நாடு முழுவதும் பாரத் பந்த் நடைபெற்று வருவதால், போக்குவரத்து மற்றும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.
பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வலியுறுத்தி டெல்லி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 100 நாட்களைக் கடந்து, 150 வது நாளை நோக்கித் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுள்ள பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 3 மாதங்களுக்கு மேலாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விவசாயிகள் போராட்டத்தில் 112 நாட்கள் வரை நடைபெற்ற கணக்கிடப்பட்ட எண்ணிக்கையின் படி கிட்டத்தட்ட 300 விவசாயிகள் போராட்ட களத்திலேயே உயிரிழந்துள்ளதாக விவசாய அமைப்புகள் தெரிவித்து உள்ளது. இப்படியாக உயிரிழந்த விவசாயிகள் பெரும்பாலும் கடும் குளிர், போராட்டத்தின் போது வாகன விபத்து, மாரடைப்பு ஆகியவற்றால் இறந்து உள்ளனர். மத்திய அரசுடன் கிட்டத்தட்ட 11 கட்ட பேச்சு வார்த்தை இதுவரை நடைபெற்று உள்ளது. ஆனால், இந்த பேச்சு வார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படாததால் தொடர்ந்து விவசாயிகளின் போராட்டமும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் தேதி வரை எங்களுடைய போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ள விவசாயிகள், 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களைத் தோற்கடிக்க மாநிலம் வாரியாக களமிறங்கி உள்ளனர்.
இந்த போராட்டமானது தற்பேர்து 4 மாதங்களை அதாவது 120 நாட்கள் எட்டி உள்ளது. இந்த நிலையில், விவசாயிகள் இன்று நாடு தழுவிய அளவில் 12 மணி நேரத்திற்கு முழு அடைப்பான 'பாரத் பந்த்' போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளனர். இதற்கு வர்த்தக சங்கங்கள் உள்பட பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து உள்ளன.
முக்கியமாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளன.
அதன்படி, இன்று காலை 6 மணிக்குத் தொடங்கிய இந்த போராட்டமானது இன்று மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. விவசாயிகளின் போராட்டம் தொடங்கிய உடன், பல்வேறு மாநிலங்களில் கடைகள் அடைக்கப்பட்டன.
பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் தேசிய நெடுஞ்சாலைகளை மறித்தும், ரயில் பாதைகளில் மறியலிலும் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் போராட்டம் நடைபெற்று வரும் பகுதியில், விவசாயிகள் சாலை மறியலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
அதே நேரத்தில், சட்டசபை தேர்தல் நடைபெறும் தமிழகம், கேரளா, அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்த முழு அடைப்பைக் கடைப்பிடிக்க வேண்டாம் என விவசாய சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அத்துடன், பாரத் பந்த் போராட்டத்தில் ஈடுபட யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்றும், விவசாய சங்கங்கள் கூறியுள்ளன. ஆனாலும், வட மாநிலங்களில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பாரத் பந்த் காரணமாக பல பகுதிகளில் கடைகள் தற்போது அடைக்கப்பட்டு உள்ளன.
விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று நாடு முழுவதும் பாரத் பந்த் நடைபெற்று வருவதால், நாட்டின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மற்றும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.
மேலும், ஹரியானா மற்றும் பஞ்சாபில் பாரத் பந்த்தின் தாக்கம் பெரிய அளவில் உணரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.