“ராணுவ வீரர்களால் தான் நாட்டு மக்கள் பண்டிகை காலத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்” என்று, ராணுவ வீரர்கள் மத்தியில் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய பிரதமர் மோடி, வீர உரையாற்றி உள்ளார்.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையானது கோலாகலமாக இன்றைய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் தான், பிரதமர் மோடி ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை இந்திய எல்லையில் உள்ள பாதுகாப்பு படையினருடன் சேர்ந்து கொண்டாடுவதை அவர் வழக்கமாக வைத்து உள்ளார்.

அந்த வகையில், இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகையை பிரதமர் மோடி, இந்திய எல்லையான காஷ்மீரின் ரஜோரி மாவட்டம் நவ்ஷாரா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் இந்திய ராணுவ வீரர்களுடன் கொண்டாடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இந்த தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, நமது ராணுவ வீரர்கள் மத்தியில் வீர உரையாற்றிய பிரதமர் மோடி, “ஒவ்வொரு தீபாவளியின் போதும் நமது எல்லைகளை பாதுகாக்கும் வீரர்களுடன் நான் கொண்டாடி வருகிறேன்” என்று, குறிப்பிட்டார்.

“இன்று நமது வீரர்களுக்காக கோடிக்கணக்கான இந்தியர்களின் ஆசியை என்னுடன் கொண்டு வந்து உள்ளேன் என்றும், நமது வீரர்கள் பாரத மாதாவின் அணிகலன் ஆவர்” என்றும், சுட்டிக்காட்டினார்.

“உங்களால் தான் நமது நாட்டு மக்கள் நிம்மதியாக உறங்குகின்றனர் என்றும், பண்டிகை காலங்களில் மகிழ்ச்சி நிலவுகிறது” என்றும், அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, “சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின் போது, இந்த படைப்பிரிவு ஆற்றிய பங்கை எண்ணி ஒவ்வொரு இந்தியரும் பெருமை அயடைகின்றனர் என்றும், இதற்கு முன்னதாக, பாதுகாப்பு படையினருக்கான ஆயுதங்களை உற்பத்தி செய்ய பல ஆண்டுகள் தேவைப்பட்டது” என்றும், அவர் கூறினார்.

“பாதுகாப்புத்துறையில் சுயசார்புடன் இருப்பதே பழைய முறைகளில் இருந்து மாறுவதற்கான ஒரே வழி” என்றும், பிரதமர் மோடி பேசினார்.

இதனிடையே, தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, பூஞ்சேரி பகுதியில் வாழும் நரிக்குறவர்கள், இருளர் இன மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த 282 நபர்களுக்கு 4.53 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.