இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கான 'ஆயுஷ்' அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட மருத்துவர்களுக்கான இணையவழிப் பயிற்சி முகாமில், இந்தியில் மட்டும் பயிற்சியை நடத்தியது குறித்து கேள்விகேட்டபோது தாங்கள் அவமதிக்கப்பட்ட செயல் நடந்துள்ளது.
அந்த அவமதிப்பு செயல், இதுதான் - வடஇந்தியாவைச் சேர்ந்த பலருக்கும் ஆங்கிலம் தெரியாததால் பயிற்சிக் கூட்டத்தை ஆயுஷ் செயலர் இந்தியில் நடத்தியிருக்கிறார். ஆனால் இந்தி புரியாத தமிழக மாணவர்கள், ஆங்கிலத்தில் பேசும்படி கேட்டுள்ளனர். ஆனால் அவர் அதை மறுத்திருக்கிறார். மேலும், `இந்தி தெரியாதவர்கள் வெளியேறுங்கள்' என்று காட்டமாக பேசியிருக்கிறார். இதை தொடர்ந்து, மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளருக்கு தமிழகத்திலிருந்து கண்டனங்கள் வலுத்துள்ளன.
இந்த யோகா மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களுக்கான காணொலி பயிலரங்கு, ஆகஸ்டு 18 முதல் 20 வரை மூன்று நாட்கள் நடந்தது. அதில், தமிழகத்தில் இருந்து மட்டும் 37 யோகா, ஊட்டச்சத்து பயிற்றுநர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் முழுக்க முழுக்க இந்திதான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது தெரியவந்துள்ளது.
இறுதி நாளான நேற்று முன் தினம் ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்ய ராஜேஷ் கொட்டேகா, “நான் முழுவதும் இந்தியில்தான் பேசப் போகிறேன். எனக்கு சரளமாக ஆங்கிலம் பேச வராது. எனவே ஆங்கிலத்தில் பேச்சை எதிர்பார்ப்பவர்கள் இங்கிருந்து சென்றுவிடலாம்” என்று கூறியது நிகழ்வில் பங்கேற்றிருந்த இந்தி தெரியாதவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபற்றிய காணொலியும் இணையத்தில் வைரலாகியது.
இந்த நிலையில் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியில் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதுபற்றி பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (ஆகஸ்ட் 22) வெளியிட்ட அறிக்கையில், “இந்தியில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டது மட்டுமின்றி, அதைத் தட்டிக் கேட்ட தமிழக மருத்துவர்களை மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் வைத்ய ராஜேஷ் கொடேச்சா அவமதித்துள்ளார்; மிரட்டியுள்ளார். அதிகார மமதையிலான இந்த செயல் கண்டிக்கத்தக்கது” என்று கூறியுள்ளார்.
மேலும், ``மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளரின் நடவடிக்கைகள் அதிகார அத்துமீறலின் உச்சக்கட்டமாகும். ஆயுஷ் அமைச்சக செயலாளர் பதவியில் ஆங்கிலம் தெரியாத கொடேச்சாவுக்கு பதில், ஆங்கிலம் பேசத் தெரியாத தமிழ் அதிகாரி ஒருவர் இருந்து, தம்மால் தமிழில் மட்டும் தான் பாடம் நடத்த முடியும் என்று கூறியிருந்தால், அதற்கு இந்தி பேசும் மாநில அரசுகளிடமிருந்து எத்தகைய எதிர்வினைகள் வந்திருக்கும்?
ஆயுஷ் பயிற்சி முகாமில் இந்தியை திணித்து, தமிழக மருத்துவர்களை அவமானப்படுத்தி, மிரட்டிய மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் கொடேச்சாவுக்கு தமிழக அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுத வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
திமுக எம்.பி. கனிமொழி, “மத்திய ஆயுஷ் அமைச்சக செயலர் வைத்யா ராஜேஷ் கொட்டேச்சா, அமைச்சகத்தின் பயிற்சி வகுப்பில்,இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம் என்று சொல்லியிருப்பது மத்திய அரசின் இந்தி திணிப்பு கொள்கையை அப்படியே பிரதிபலிப்பதாக இருக்கிறது” என்று குற்றம்சாட்டினார்.
மேலும்,``இது கண்டிக்கத்தக்கது.மத்திய அரசு, உடனடியாக அந்த செயலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் எத்தனை நாள் இந்தி தெரியாது என்றால் அவமதிக்க படுவதை, பொறுத்துக்கொள்ளப் போகிறோம்?" என்ற கேள்வியையும் முன்வைத்திருக்கிறார் கனிமொழி.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ``ஆயுஷ் அமைச்சக அதிகாரிகள் தமிழ் புரியாமல் எப்படி எங்கள் மருத்துவத்தைப் புரிந்து கொள்வர் என்ற கேள்வி எழுப்பாதது எம் மருத்துவர்களின் பெருந்தன்மை. அனைவருக்கும் புரியும் மொழியில் இயங்கவேண்டியது அரசின் கடமை.இது இந்தி அரசல்ல.இந்திய அரசு என்பதை மறந்துவிட வேண்டாம்.வாழிய பாரத மணித் திருநாடு" என்று கூறி தன் பங்கு எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்.
இவர்கள் மட்டுமன்றி, தமிழகத்தை சேர்ந்த சித்த மருத்துவர்கள், ஆயுர்வேத மருத்துவர்கள், யோகா மற்றும் நேச்சுரோபதி மருத்துவர்கள் பலரும் தங்களின் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக மத்திய அரசும், ஆயுஷ் அமைச்சகமும் என்ன மாதிரியான பலனை தரப்போகிறது எனப்பொறுத்திருந்து பார்க்கலாம்.