கேரளாவை தொடர்ந்து கர்நாடகா மாநிலத்தின் நந்தி மலையின் நடுவே இளைஞர் ஒருவர் சிக்கிக்கொண்ட நிலையில், ஹெலிகாப்டர் உதவியுடன் இந்திய விமானப் படை அவரை மீட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளா பாலக்காட்டை சேர்ந்த 23 வயதான பாபு என்ற இளைஞர், கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது 3 நண்பர்களுடன் அங்குள்ள மலம்புழையில் உள்ள காட்டுப்பகுதிக்குள் மலையேற சென்று உள்ளனர். அங்கு, மதிய நேரத்தில் அவர்கள் மலையில் இருந்து இறங்கி உள்ளனர்.
அப்போது, அவர்களில் பாபு மட்டும் அந்த மலையின் பள்ளமான ஒரு இடத்தில் இருந்த பாறை இடுக்குகளுக்குள் தவறி விழுந்து உள்ளார். ஆனால், அவருடன் சென்ற மற்ற நண்பர்கள் பாபுவை மீட்க முயன்று உள்ளனர். ஆனால், நண்பர்களின் முயற்சி படுதோல்வியில் முடிந்தது. இதனால், பதறிப்போன அந்த நண்பர்கள் மலையில் இருந்து கீழே இறங்கி வந்து, மலம்புழை வனத்துறையினரிருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.
இதனையடுத்து, மலை ஏற்ற வீரர்களும், விபத்து பேரிடர் மீட்பு படையினரும் அங்கு விரைந்து சென்ற நிலையில், முதல் நாள் அன்று பாபு சிக்கியுள்ள இடத்தை அவர்களால் அடையாளம் காண முடியாத நிலையில், அடுத்த நாள் ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் அங்கு முடுக்கிவிடப்பட்ட நிலையில், மலை இடுக்கில் 2 நாட்களாக சிக்கி தவித்த இளைஞரை, மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர்.
தற்போது, இதே போன்ற ஒரு சம்பவம் பெங்களூருவில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் நடந்து உள்ளது.
மலையேற்றத்திற்காக பெங்களூருவில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நந்திமலைக்கு இளைஞர் ஒருவர் தனியாக சென்று உள்ளார்.
அதாவது, டெல்லியைச் சேர்ந்த நிஷாங்க் கவுல் என்ற இளைஞர், பெங்களூருவில் தங்கி படித்து வருகிறார்.
18 வயதான நிஷாங்க், PES பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு படித்து வரும் நிலையில், அந்த பகுதியில் மலையேற்றத்திற்காக பெங்களூருவில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நந்திமலைக்கு தனியாக புறப்பட்டுச் சென்று உள்ளார்.
அப்போது, சுமார் 300 அடி பள்ளத்தில் நிஷாங்க் தவறி விழுந்து உள்ளார். அதன் பிறகு, அந்த மலையின் ஒரு பகுதியில் உருண்டு விழுந்த நிலையில், தனது பையில் இருந்த செல்போன் மூலமாக, அவரே அங்குள்ள போலீசாருக்கு போன் செய்து, உதவி கேட்டு உள்ளார்.
இதனையடுத்து, அங்குள்ள நந்தி மலையில் சிக்கிக்கொண்ட தனது சகோதரர் நிஷாங்கை மீட்க உதவுமாறு அவரது சகோதரி சிம்ரன் கவுல் என்பவர், தேசிய பேரிடர் மீட்பு படை, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சமூக வலைத்தள பக்கத்தில் டேக் செய்திருந்தார்.
இதனையடுத்து, சிக்கபள்ளாப்பூர் காவல் கண்காணிப்பாளர் ஜி.கே.மிதுன்குமார், கூடுதல் துணை ஆணையர் அமரீஷ் மற்றும் அவரது குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, யெலஹங்காவில் உள்ள இந்திய விமானப்படை அதிகாரிகளை தொடர்பு கொண்டு உதவி கேட்டு உள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர் மீட்பு பணியில் ஈடுபட்ட நிலையில், கயிறு மூலம் நிஷாங்க் பத்திரமாக மீட்கப்பட்டார்.
மேலும், அவர் லேசான காயமடைந்திருந்த நிலையில், அவரை மருத்துவமனையில் தற்போது அனுமதித்து உள்ளனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில், மீட்கப்பட்ட அந்த இளைஞர் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் மற்றும் அத்து மீறி நுழைந்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.