வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டங்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் 40 விவசாய சங்கத் தலைவர்களும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவும், குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை உறுதி செய்யவும் கோரி, விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதி முதல் டெல்லியில் முகாமிட்டுத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது வரை பல கட்டங்களாகப் பேச்சு வார்த்தை நடத்தியும், இது வரை எந்த ஒரு சுமுக முடிவும் எட்டப்படவிட வில்லை. ஆனாலும், டெல்லியில் நிலவும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், விவசாயிகள் தங்களது உரிமைகளுக்காகத் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர்.
அதே நேரத்தில், 3 வேளாண் சீர்திருத்தச் சட்டங்களையும் திரும்பப் பெறும் வரையில், தங்களது போராட்டம் தொடரும் என்றும் விவசாயிகள் திட்டவட்டமாகத் தெரிவித்து அதில் உறுதியாகவும் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஹரியானா மாநிலம் கர்னால் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய பாரதீய கிசான் யூனியன் அமைப்பின் தலைவர் ராகேஷ் திகாயத், “விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறும் வரையில், மத்திய அரசை அமைதியாக இருக்க வேளாண் அமைப்புகள் விடக் கூடாது” என்று, கேட்டுக்கொண்டார்.
அத்துடன், “40 லட்சம் டிராக்டர்களை கொண்டு இம்முறை பேரணி நடத்தப்படும் என்றும். இந்த பேரணியில், நாடு முழுவதும் ஆதரவைப் பெறுவதற்காக 40 தலைவர்களும் நாமு முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்” என்றும், அவர் தெரிவித்தார்.
குறிப்பாக, “ இந்த இயக்கத்திற்காக ஒவ்வொருவரும் இணைந்து உள்ளனர் என்றும், நாட்டின் எதிர் காலம் பற்றி விவசாயிகள் இனி முடிவு செய்வார்கள்” என்றும், அவர் ஆவேசமாகப் பேசினார்.
அதே போல், விவசயாகள் அனைவரும் கடந்த வாரம் மத்திய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலைகளில் “சக்கா ஜாம்” என்கிற
சாலை மறியல் போராட்டத்தை நடத்தினார்கள். அப்போது, போலீசார் பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டு, விவசாயிகள் சாலைகளுக்கு
வராதபடி சில விசயங்களைச் செயல்படுத்தியிருந்தனர்.
இதன் காரணமாக, “தேசத்துக்கு எதிராக மத்திய அரசு தான் செயல்படுகிறது என்றும், விவசாயிகள் அல்ல” என்றும், பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்தார்.
முக்கியமாக, “உரிமைக்காகப் போராட்டம் நடத்தும் விவசாயிகளை, தேச விரோதி என மத்திய அரசு கூறுகிறது என்றும், ஆனால் மத்திய அரசு தான் தேசத்திற்கு எதிராகச் செயல்படுகிறது” என்றும், பிரியங்கா காந்தி மிக கடுமையாகக் குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.