“இந்து சாமியார்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக நீதித்துறை உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணாவுக்கு உச்ச நீதிமன்றத்தின் 76 வழக்கறிஞர்கள் கடிதம் அனுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது, உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் “தர்ம சன்சத்” என்கிற இந்து அமைப்பு, 3 நாட்கள் மாநாட்டைக் கடந்த 17 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை நடத்தியது.
இந்த மாநாட்டில், ஏராளமான இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் பாஜகவின் முக்கிய தலைவர்கள் என்று பலரும் கலந்து கொண்டு ஆவேசமாக பேசினார்கள்.
இந்த மாநாட்டில், கடைசி நாளில் சில அதிரடியான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
அதன் படி, கடைசி நாள் மாநாட்டில் எடுக்கப்பட்ட உறுதி மொழியின்படி, “இந்தியாவை இந்துக்களின் நாடாக மாற்றுவோம் என்றும், அதற்காகக் கொலையும் செய்வோம்” என்று, அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டது, மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இப்படியாக, சாமியார்கள் மாநாட்டில் பாஜக தலைவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் உறுதி மொழி எடுத்துக்கொண்ட இந்த காட்சிகள் யாவும், யூடியூப் தளத்தில் நேரலையில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. இதனைப் பார்த்த பலரும் கடும் அதிர்ச்சியடைந்து, பீதியும் அடைந்தனர்.
அதாவது, சாமியார்கள் மாநாட்டில் பாஜக தலைவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கும் வீடியோவில், “இந்தியாவை இந்து நாடாக மாற்றுவோம், இந்துக்களுக்கு மட்டுமான நாடாக உருவாக்குவோம், இதற்காகச் சண்டையிடுவோம், செத்து மடிவோம், தேவை ஏற்பட்டால் நாங்கள் கொலையும் செய்வோம், எதற்காகவும் அஞ்ச மாட்டோம். எந்த தியாகத்தையும் செய்யவும் தயங்க மாட்டோம்” என்று, அவர்கள் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.
அத்துடன், “நமது முன்னோர்கள், ஆசிரியர்கள், பாரத மாதா ஆகியோர் நமக்குச் சக்தியைத் தருவார்கள்” என்றும், அவர்கள் அந்த வீடியோவில் பேசியது, பல்வேறு தரப்பினரையும் கடும் பீதிக்கு உள்ளாக்கியது.
இந்த நிலையில் தான், “ஹரித்வார், டெல்லி ஆன்மீக மாநாடுகளில் இடம் பெற்ற இன ஒழிப்புப் பேச்சுகளால் பல லட்சம் முஸ்லீம்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக” உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, மூத்த வழக்கறிஞர்கள் 76 பேர் சேர்ந்து கூட்டாக கடிதம் எழுதி உள்ளனர்.
அதன்படி, துஷ்யந்த் தவே, பிரசாந்த் பூஷன், விருந்தா குரோவர், சல்மான் குர்ஷித், அஞ்சனா பிரகாஷ் உள்ளிட்ட 76 மூத்த வழக்கறிஞர்கள் இணைந்து தலைமை நீதிபதி எம்.வி.ரமணாவுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள்.
அந்த கடிதத்தில், “ஹரித்வார், டெல்லி மாநாடுகளில் இடம் பெற்ற பேச்சு வெறும் மத வெறுப்புணர்வு பேச்சு மட்டுமல்ல என்றும், ஒரு இனத்தையே ஒட்டு மொத்தமாக அழித்து ஒழிக்க செய்வதற்காக பகீரங்க அழைப்பு” என்றும், 76 மூத்த வழக்கறிஞர்களும் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளனர்.
மேலும், “இது நாட்டின் ஒற்றுமை, இறையாண்மைக்கு விடுக்கப்பட்ட மாபெரும் அச்சுறுத்தல் மட்டுமின்றி, லட்சக்கணக்கான முஸ்லீம்களின் உயிருக்கும் இது ஆபத்தானது” என்றும், அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
குறிப்பாக, “இப்படியாக இனப் படுகொலை செய்ய அழைப்பு விடுத்த நபர்களின் பட்டியலையும்”, தங்களது கடிதத்தில் அவர்கள் இணைத்து உள்ளனர்.
“கலவரத்தை தூண்டும் விதமாக பேசியவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், இது போன்ற நிகழ்வுகள் தொடர் கதையாகி விடாமல் தடுக்க உச்ச நீதிமன்றமே நேரடியாக தலையிட வேண்டும்” என்றும், தலைமை நீதிபதி என்.வி. ரமணாவை மூத்த வழக்கறிஞர்கள் 76 பேரும் கூட்டாக சேர்ந்து ஒன்றாக வலியுறுத்தி உள்ளனர்.