நாட்டில் இரு மாநிலங்களில் 55 சதவீதம் கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன என மத்திய சுகாதாரத் துறையின் இணை செயலாளர் தெரிவித்து உள்ளார்.
டெல்லியில் மத்திய சுகாதார அமைச்சக கூட்டம் இன்று நடந்தது. இதில் பேசிய மத்திய சுகாதார துறையின் இணை செயலாளர் லவ் அகர்வால் இந்தியாவில் இரு மாநிலங்களில் 55 சதவீதம் கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்படுகின்றன என கேரளா மற்றும் மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களை சுட்டி காட்டியுள்ளார்.
ஒட்டுமொத்த அடிப்படையில் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து உள்ளது. அவற்றில் கடந்த ஒரு வாரத்தில் ஐரோப்பிய நாடுகளில் 70 சதவீதம் அளவுக்கு எண்ணிக்கை பதிவாகி உள்ளது. வார இறுதி நாளான 28-ந் தேதியில், 2.75 லட்சம் புதிய பாதிப்புகளும், 31 ஆயிரம் உயிரிழப்புகளும் ஏற்பட்டு உள்ளன என கூறியுள்ளார்.
கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் கொரோனாவால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை விட அதிகமாக உள்ளது. நாட்டின் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஆக்டிவ் கேஸ்களில் 55 சதவீத கேஸ்கள் இந்த இரு மாநிலங்களை சேர்ந்தவர்களாவர். இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடுவது அதிகரித்து வருகிறது.
நாடு முழுவதும் தடுப்பூசி போடுவதை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஐரோப்பா பகுதிகளில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது.
ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பீடு செய்யும் போது தென்கிழக்காசிய நாடுகளான இந்தியா உள்பட 12 நாடுகளில் கொரோனாவால் வெறும் 1.2 லட்சம் பேர் மட்டுமே கடந்த வாரம் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
உலகளவில் கொரோனா பாதித்த கேஸ்களில் தென்கிழக்காசிய நாடுகளில் பாதிப்பானது வெறும் 3.1 சதவீதமாகும். கொரோனா கேஸ்கள் தென்கிழக்காசிய நாடுகளில் குறைந்து வருகிறது”இவ்வாறு தெரிவித்தார். இதற்கிடையில் இந்தியாவில் கர்நாடகாவில் இருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.