தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் திருமணமான 4 மாதங்களில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலடிக்குமூலை கிராமத்தை சேர்ந்தவர் குமார் - நாகம்மாள் தம்பதியினர். இவர்களது மகள் நித்யா அவருக்கு வயது 22. இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு முத்துப்பேட்டை அடுத்துள்ள கோவிலூர் கிராமத்தை சேர்ந்த ஐயப்பன் உடன் திருமணம் நடைபெற்றது. திருமணமான சில நாட்களிலேயே கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. இதனால், நித்யா கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். ஐயப்பன் சேர்ந்து வாழ வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் கணவன் - மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு நித்யா, பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் மீது போலீசார் இரு தரப்பினரிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், முடிவு எட்டப்படவில்லை. இதனால் காவல் நிலையத்தில் புறப்பட்டு சென்ற நித்யா, பட்டுக்கோட்டை பழைய நிலையத்தில் திடீரென எலி மருந்தை குடித்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கணவர் ஐயப்பன், நித்யாவின் கையில் இருந்த விஷத்தை பறித்து தானும் குடித்துள்ளார்.

அதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு நித்யாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நித்யா பரிதாபமாக உயிரிழந்தார். ஐயப்பன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து நித்யாவின் தாயார் நாகம்மாள் அளித்த புகாரின் பேரில், பட்டுக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், திருமணமான 4 மாதங்களில் நித்யா தற்கொலை செய்து கொண்டதால், வரதட்சணை கொடுமை காரணமா? என பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.