கொடுங்கையூர் விசாரணை கைதி லாக்கப்பில் மரணமடைந்த விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
சென்னை அடுத்த செங்குன்றம் பகுதியில் உள்ள அலமாதி வேட்டைக்காரன் பாளையத்தைச் சேர்ந்த அப்பு என்ற ராஜசேகர், தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இவரை, ஒரு திருட்டு வழக்கு தொடர்பாக கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார், காவல் நிலையத்தில் வைத்து தீவிரமாக விசாரித்து உள்ளனர்.
அப்போது, போலீசார் அவரை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை என்ற பெரியல் கடுமையதாக தாக்கியதாக தெரிகிறது.
இதன் காரணமாக, ராஜசேகருக்கு காவல் நிலையத்திலேயே கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து, ராஜசேகரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர்.
அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர், “ராஜசேகர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக” கூறியுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாகவே, ராஜசேகர் உடல் பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதே நேரத்தில், “போலீசார் லாக்கப்பில் வைத்து தாக்கியதால் தான், ராஜசேகர் உயிரிழந்ததாக” அவரது உறவினர்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டினர்.
இது குறித்து போலீசார் தரப்பில் கூறும்போது, “குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக திடீரென மயங்கி விழுந்த வரை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக” கூறப்பட்டு உள்ளது.
எனினும், இது குறித்து சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, இணை ஆணையர் ராஜேஸ்வரி ஆகியோர் கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு சென்று சுமார் 6 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து, சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு பேசும்போது, “ராஜசேகர் மீது ஏற்கனவே 27 குற்ற வழக்குகள் உள்ளன” என்று, குறிப்பிட்டார்.
மேலும், “விசாரணையின் போது ராஜசேகருக்கு உடல் நிலை சரியில்லாமல் போய் உள்ளது” என்றும் குறிப்பிட்ட வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு , “ராஜசேகர் மரணம் தொடர்பாக நீதித்துறை நடுவர் விசாரிப்பார்” என்றும், கூறினார்.
அத்துடன், “ராஜசேகரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்படவில்லை என்றும், சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்துவது காவல் துறையினரின் கடமை” என்றும், அவர் விளக்கம் அளித்தார்.
“ராஜசேகர் மரணம் தொடர்பாக 5 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர் என்றும், அதன்படி, கொடுங்கையூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ், உதவி ஆய்வாளர் கன்னியப்பன், தலைமை காவலர்களான ஜெயசேகர், மணிவண்ணன், முதல்நிலை காவலர் சத்தியமூர்த்தி ஆகியோரையும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார்” என்றும், கூடுதல் ஆணையர் அன்பு கூறினார்.
இதனையடுத்து, விசாரணைக் கைதி ராஜசேகர் காவல் நிலையத்தில் உயிரிழந்த இந்த வழக்கானது, சிபிசிஐடி க்கு மாற்றப்பட்டது.
அதே நேரத்தில், சென்னை கொடுங்கையூரில் விசாரணை கைதி ராஜசேகர் மரணம் தொடர்பாக கெல்லீஸ் சிறார் 12 வது நீதிமன்ற மாஜிஸ்திரேட் லட்சுமி, நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையின் போது, காவல் நிலையத்தில் வைத்து ராஜசேகரிடம் விசாரணை நடத்திய போலீசாரிடமும் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.