கேரளாவில் குழந்தைக்கு பல் துலக்காமல் முத்தம் கொடுப்பதை கண்டித்ததால் மனைவியை கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த அவினாஷ் என்ற இளைஞருக்கும், கோவையைச் சேர்ந்த தீபிகா என்பவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இரு வீட்டார் முறைப்படி திருமணம் நடந்து உள்ளது.
இந்த தம்பதியினருக்கு, தற்போது இரண்டரை வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
இந்த சூழலில் தான், பெங்களூருவில் வேலை பார்த்து வந்த கணவன் அவினாஷ், பெங்களூரில் உள்ள விமானப்படைக்கான சில பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தார்.
இதனையடுத்து, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவர் ஊர் திரும்பி உள்ளார்.
அத்துடன், தற்போது அவர் வொர்க் ஃபிரம் ஹோம் முறையில் வீட்டில் இருந்துக்கொண்டே பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் தான், அவினாஷ் தினமும் தூங்கி எழும் போதெல்லாம் பல் துலக்காமலேயே, தனது குழந்தைக்கு முத்தம் கொடுப்பதையே பழக்கமாகவே வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இதனால், “குழந்தைக்கு நோய் தொற்று பரவக்கூடும்” என்று கூறிய அவரது மனைவி தீபிகா, “பல் துலக்காமல் குழந்தைக்கு முத்தம் கொடுக்க கூடாது” என்று, தனது கணவன் அவினாஷை கண்டித்து அடிக்கடி சண்டை போட்டிருக்கிறார்.
அதன்படியே, நேற்றைய தினம் வழக்கம் போல், கணவன் அவினாஷ் தூங்கி எழுந்ததும், தனது குழந்தைக்கு முத்தம் கொடுத்திருக்கிறார்.
அப்போது, அவரது மனைவி தீபிகா, தனது கணவனை கண்டித்து உள்ளார். இதனால், அந்த தம்பதிக்கு இடையே வழக்கம் போல் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் பெரியதாக முற்றிய நிலையில், கடும் கோபம் அடைந்த கணவன் அவினாஷ், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவி தீபிகாவை கண் இமைக்கும் நேரத்திற்குள் குத்தி உள்ளார்.
இதில், தீபிகா பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து உள்ளார். அப்போது, வலியால் துடித்த தீபாகவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து உள்ளனர்.
அதன் பிறகு, படுகாயம் அடைந்த தீபிகாவை மீட்ட அக்கம் பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.
அதே நேரத்தில், மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே தீபாக பரிதாபமாக உயிரிழந்தார் என்றும் கூறப்படுகிறது.
அப்போது, மனைவியை குத்தி கொலை செய்த அவரது கணவன் அவினாஷை, அந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவர் தப்பி செல்லாமல் தடுத்து நிறுத்தி, போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனால், மனைவியை கொலை செய்த கணவனை கைது செய்த போலீசார், இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.